சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் வெளியில் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த நிலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சுமார் பத்து மணியளவில் ஆலந்தூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்துவருகிறது.

தற்போது தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், திடீரென சூறைக்காற்றுடன் விமான நிலையப் பகுதியில் பெய்ததால் பல்வேறு விமான சேவைகளும் பாதிப்படைந்தது. சென்னையில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 16 சென்டிமீட்டர் என்ற அளவில் மிக கனமழை பெய்துள்ளது. அடுத்தபடியாக வளசரவாக்கம் மற்றும் சாலிகிராமத்தில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் பெய்த திடீர் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதித்து, பயணிகள் அவதியடைந்தனர்.
காலை 10 மணியளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த ஐந்துக்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன.

மும்பையில் இருந்து 145 பயணிகளுடன் சென்னைக்கு வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து 160 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கவுகாத்தியிலிருந்து 138 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பெங்களூரில் இருந்து 125 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்தன.
இதையும் படிங்க |
அதனையடுத்து, மும்பையில் இருந்து சென்னைக்கு தரையிறங்க வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது. அதைப்போல் டெல்லி, மும்பை, கொச்சி, கோவை, தோகா உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை குளிர்வித்த திடீர் மழையால், போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.