சென்னை: ஆந்திராவில் இருந்து அரிய வகை உயிரினமான எறும்புத் தின்னி கடத்தி வரப்பட்டு சென்னை தாம்பரம் அருகே விற்பனை செய்யப்பட இருப்பதாக தாம்பரம் வனச்சரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் தாம்பரம் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி இன்று அதிகாலை தாம்பரம் அடுத்த முடிச்சூர் அருகே பைபாஸ் சாலையில் வன உயிரின குற்றப்பிரிவு போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி விசாரணை செய்தனர்.
அதில் இருந்த 4 நபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் ஆட்டோவில் இருந்த அட்டைப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் இரும்பு கூண்டுக்குள் வைத்து இரண்டு எறும்புத் தின்னியை கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து 4 பேரையும் தாம்பரம் வன காவல் நிலையம் அழைத்து வந்து, விசாரணை நடத்தியபோது அவர்களில் 3 பேர் சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், மற்றொருவர் முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் 4 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் கேரள மாநிலத்தை சேர்ந்த அரிய வகை விலங்குகள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரின் அறிவுறுத்தலின்படி சென்னை, திருவொற்றியூரை சேர்ந்த 3 நபர்கள் ஆந்திரா சென்று அங்கு எறும்பு தின்னியை பிடித்து வந்து அதை முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த நபருக்கு 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய ஆட்டோவில் கடத்தி வந்தது தெரிய வந்தது.
நேபாளம், பூட்டான், ஸ்ரீலங்கா, சீனா, தைவான், ஜப்பான் போன்ற நாடுகளில் மருத்துவ பொருள், வாசனை திரவியம், அழகு சாதனங்கள் செய்வதற்கு இந்த எறும்பு தின்னிகளின் செதில்கள், நகங்கள், பற்கள், தோல்கள் பயன்படுவதாக கூறப்படுகிறது. எனவே இவற்றை இதனை ஆந்திர வனப்பகுதியில் பிடித்து அதிக விலைக்கு விற்பதற்கு கடத்தியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து வன உயிரின கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட கேரளாவை சேர்ந்த முக்கிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட எறும்பு தின்னிகள் மிகவும் சோர்வாக காணப்பட்டதால் கரையான் அரித்த மரத் துண்டுகளை அவைகளுக்கு உணவாக வனத்துறை அதிகாரிகள் வழங்கினர்.
இதையும் படிங்க: "எப்.ஐ.ஆர் மட்டும் போதாது - புலனாய்வு அமைப்புக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை!
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட வனத்துறை அதிகாரி சரவணன் கூறும்போது, ''அழிந்து வரும் பட்டியலில் முதல் வகையில் எறும்பு தின்னியும் ஒன்று. அதனை விற்பனைக்காக ஆந்திரா வனப்பகுதியில் இருந்து பிடித்து சென்னையில் விற்க முயன்ற 4 பேரை கைது செய்துள்ளோம். மேலும் இதன் பின்னணியில் உள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியை தேடி வருகிறோம்.
இதனால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை. இவர்களுடைய விவரங்களை வெளியிட்டால் முக்கிய குற்றவாளி தலைமறைவாக வாய்ப்பு உள்ளது. பொதுமக்களிடையே எறும்புத்தின்னி மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்கிற தவறான எண்ணங்கள் உள்ளது. இதன் மூலம் எந்த ஒரு மருத்துவ பொருட்களும் தயாரிக்க முடியாது. இதனால் இதுபோன்ற அரிய வகை அழியும் விளிம்பில் உள்ள விலங்குகளை பிடித்து சட்ட விரோதமாக விற்க முற்பட்டு சிக்கிக் கொள்கின்றனர்.
கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இது போன்று அரிய வகை வன விலங்குகளை கடத்தியதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அரிய வகை வனவிலங்குகள் மீட்கப்பட்டு உள்ளது. இது போன்ற தவறுகளை செய்து குற்றம் உறுதியானால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும். மேலும், வனவிலங்குகளை பிடிக்கவோ, வளர்க்கவோ தடை உள்ளது. அதனை மீறுபவர்கள் மீது வனத்துறை பாதுகாப்பு சட்டப்படி அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும்." என்று அவர் கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.