சென்னை: சென்னையில் நகை, பணம் திருடிய வழக்கில் 21 வருடமாக தலைமறைவாக இருந்த பலே கில்லாடியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
சென்னை ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான தனிப்படை போலீசார் பழைய வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த முனுசாமி கடந்த 2004 ஆம் ஆண்டு திருமுல்லைவாயல் காவல் நிலைய எல்லையில் வீட்டின் கதவை உடைத்து இரண்டு சவரன் நகை மற்றும் 5000 பணம் திருடிய குற்ற வழக்கில் 21 வருடமாக தலைமறைவாக இருந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் திருமுல்லைவாயல் காவல் நிலைய தனிப்படை போலீசார் முனுசாமியை இன்று (மே 20) கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முனுசாமி மீது ஆவடி, கொளத்தூர், ராஜமங்களம், வில்லிவாக்கம், செங்கல்பட்டு டவுண், படாளம், சென்னை தலைமைச்செயலக காலனி மற்றும் புளியந்தோப்பு ஆகிய காவல் நிலைய எல்லைகளில் பல்வேறு பகுதிகளில் வீடு உடைத்து கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
மேலும் 2015 ஆம் ஆண்டு மதுரவாயல் காவல் நிலைய எல்லையில் உள்ள நடிகர் விஜயகுமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையும் படிங்க: "பார்க்கிங் கட்டணம் கேட்காதே" - சென்னை துறைமுகத்தில் 4500 கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்!
இந்த நிலையில் வழக்குகளில் பிடிபடாமல் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முனுசாமியை திருமுல்லைவாயல் போலீசார் தற்போது கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட முனுசாமி மீது வேறு ஏதாவது காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளனவா? என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.