சென்னை: மணலி ஏரி மறுசீரமைக்க ரூ.4.73 கோடி அம்ருத் திட்டம் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஜூலை மாதத்திற்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் சென்னை மாநகராட்சியில் வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 11) மணலி மண்டலத்தில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணி, மின்மயானம் அமைக்கும் பணி, கடப்பாக்கம் ஏரியில் கட்டப்பட்டு வரும் சுற்றுசூழல் பூங்கா அமைக்கும் பணிகளை, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மணலி பாடசாலையில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில், மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை வழங்கி, பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து மேயர் பிரியா பேசியதாவது, “ வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ், மணலி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை இன்று ஆய்வு செய்தோம். மணலி ஏரி மறுசீரமைக்கும் பணிகளை ஆய்வு மெற்கொண்டுள்ளோம். இதற்காக ரூ.4.73 கோடி, அம்ருத் திட்டம் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஜூலை மாதத்திற்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “குடியரசுத் தலைவர் பாராட்டு சான்றிதழ குடுக்க மாட்டேங்குறாங்க...”- எஸ்.பி.யிடம் புகார் அளித்த ராணுவ வீரர்! |
புறநகர் சென்னை பகுதிகளான மணலி, மாதவரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதி. ஆனால், அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சித்திட்ட பணிகளும் மேற்கொள்ள இயலாத சூழல் இருந்தது. தற்போது இப்பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
மணலி மண்டலத்தை பிரிப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதனை தற்போது நிறைவேற்றும் திட்டம் இல்லை, அவை நடைமுறைக்கு வராது. அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் மணலியை பிரிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து அமைச்சர் முடிவெடுப்பார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், துணை ஆணையாளர் படிகல், செயற்பணி துறை துணை ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, வடசென்னை வடக்கு சென்னை மாநகராட்சி இணை ஆணையர் கட்டா ரவிதேஜா, மண்டல செயற்பொறியாளர் தெய்வேந்திரன், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர் முல்லை ராஜசேகர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்