சென்னை: மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டுப் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “நான் கடந்த 2011ஆம் ஆண்டு ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான மாம்பாக்கம், நந்தா நகர் ஐந்தாவது தெருவில், அவர் நடத்தி வந்த இடத்துடன் கூடிய ஐஸ் கம்பெனியை ரூ.49 லட்சத்திற்கு விலை பேசி அதனை எனது பெயரில் வாங்குவதற்காக ரூ.26 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன்.
மேலும், மீதமுள்ள பணத்தை மூன்று மாதங்களில் தருவதாக எங்களுக்கு இடையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அப்போதே அந்த சொத்தின் ஆவணத்தைக் கார்த்திகேயன் என்னிடம் கொடுத்துவிட்டார். இந்நிலையில், ரூ.8 லட்சத்திற்கு இரண்டு காசோலைகள் ஆகவும், மீதம் இருந்த ரூ.18 லட்சத்தை ரொக்கமாகவும் கொடுத்தேன். பின்னர், நான் அந்த ஐஸ் கம்பெனியை நல்லமுறையில் நடத்தி தொழிலை விரிவுபடுத்தினேன். இதையறிந்த கார்த்திகேயனுக்குப் பொறாமை ஏற்பட்டு அடிக்கடி எனக்குப் பலவிதமான தொல்லைகளைக் கொடுத்து வந்தார்.
புகார் மனு: அதோடு நில்லாமல் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் மெஷினையும் திருடிச் சென்று மறைத்து வைத்துக் கொண்டார். வெளியாட்கள் தான் திருடியுள்ளதாக முதலில் நான் நினைத்திருந்த வேளையில், நான் எந்தப் புரோக்கர் மூலமாக அந்த மெஷினை வாங்கினேனோ அதே புரோக்கர் மூலமாக, கார்த்திகேயன் விற்பதற்கு ஏற்பாடு செய்த நிலையில் எனக்கு இந்த விவரம் தெரியவந்தது.
இந்நிலையில், எனக்கு தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு அந்த ஐஸ் கம்பெனியை என்னால் நடத்தவே இயலவில்லை. இதனால் 2018ஆம் ஆண்டு இடத்துடன் கூடிய ஐஸ் கம்பெனியை சந்திரா என்பவருக்கு ரூ.69 லட்சத்திற்கு விலை பேசி விற்க முடிவு செய்தேன். கார்த்திகேயன் எனக்கு விற்பனை செய்வதற்காக ஒப்புக் கொண்டபோது, பணத்தைப் பெற்றவுடன் அந்த இடத்தின் ஆவணங்களை என்னிடம் ஒப்படைத்தார்.
அந்த ஆவணத்தை நான் சந்திராவிடம் கொடுத்து ரூ.18 லட்சத்தை முன்பணமாகப் பெற்றுக்கொண்டேன். மீதியுள்ள பணத்திற்கு அவரும் என்னிடம் கால அவகாசம் கேட்டிருந்தார். அதற்கு முன்னதாக அந்த இடத்தினைச் சந்திராவிற்குக் கம்பெனியுடன் விற்கப் போவதைக் கார்த்திகேயனிடம் தகவல் தெரிவித்திருந்தேன். அதுமட்டுமின்றி, கார்த்திகேயனுக்குச் சந்திராவை நன்றாகத் தெரியும். கார்த்திகேயன் நட்பு ரீதியில் நன்றாக அறிமுகமானவர்.
இந்நிலையில் கார்த்திகேயன் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் என்னிடம் வழங்கி இருந்த மேற்படி சொத்தின் ஆவணத்தைக் காணவில்லை என்று சந்திராவிடம் நில ஆவணம் இருப்பதை மறைத்து என்னை ஏமாற்றும் நோக்கில் அங்குப் புகார் அளித்து அதன் அடிப்படையில் நுழைய முடியாத சான்றிதழ் (NONTRACEABLE CERTIFICATE) பெற்று மோசடியாகக் காவல்துறையினரை ஏமாற்றிச் சான்றிதழ் பெற்றுள்ளார்.
அந்த சான்றிதழைப் பயன்படுத்தி எனக்கு விற்பனை செய்தவதாக ஒப்பந்த பத்திரம் போட்டு, அதில் பெரும் பகுதி பணத்தைப் பெற்றுக் கொண்ட கார்த்திகேயன் அந்த சொத்தினை அவரது மனைவி பெயருக்குப் பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நான் சந்திராவிடம் அந்த ஆவணத்தை என்னிடம் வழங்குமாறும், சொத்தினை விற்று அவரது பணத்தினைத் திரும்பத் தந்துவிடுகிறேன் என்றும் கூறினேன்.
ஆனால் அவர் அந்தப் பத்திரத்தை என்னிடம் தரவில்லை. இது சம்மந்தமாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். எனது புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சந்திரா அவரிடம் மேற்சொன்ன மாம்பாக்கம் இடத்தின் பத்திரம் உள்ளதை ஒப்புக்கொண்டு திருப்பித் தருவதாகத் தெரிவித்துச் சென்றார். இவ்வாறு இருக்கக் கார்த்திகேயன் மேற்படி சொத்தை அபகரிக்க வேண்டும்.
என்னிடம் பெற்ற பணத்தைத் திரும்பத் தரக்கூடாது என்ற கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டுள்ளார். உண்மையை மறைத்துப் பத்திரத்தைக் காணவில்லை என்று சம்மந்தமே இல்லாத மயிலாப்பூரில் காவல் நிலையத்தில் தாக்கல் செய்து அந்தக் காவல் துறையினரையும் ஏமாற்றி என்னையும் நுழைய முடியாத சான்றிதழ் பெற்றுச் சொத்தினை அவரது மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இதன் மூலமாகக் கார்த்திகேயன் எனது ரூ.26 லட்சம் பணத்தினை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதுடன், சந்திராவிற்கு நான் காரணமே இல்லாத கடனாளியாக இருக்கிறேன். எனவே என்னை ஏமாற்றிய கார்த்திகேயன் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு மேற்படி இடத்தினை மீட்டுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
விசாரணையில் வழக்கு: பின்னர் இந்தப் புகார் மனு தாழம்பூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தாழம்பூர் போலீசார் தீவிர விசாரணைக்குப் பின் கடந்த 2024 அக்டோபர் 28ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, வசிப்பிடத்தில் திருட்டு, கட்டுமான பராமரிப்பு விற்பனை தொடர்பான குற்றங்கள் ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனத் தாழம்பூர் காவல் நிலையத்திலிருந்து 3 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், கார்த்திகேயன் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 9) காலை தாழம்பூர் போலீசார் அபிராமபுரம் வந்து கார்த்திகேயனிடம் விசாரணைக்காக அழைத்துள்ளனர். அப்போது கார்த்திகேயனுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகேயனை போலீசார் பிடித்து இழுத்த போது அவர் கீழே விழுந்து மயங்கியுள்ளார்.
இதைப்பார்த்த கார்த்திகேயனின் குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணை என்ற பெயரில் கார்த்திகேயனை போலீசார் இழுத்துச் சென்று தள்ளியதால் தான் கீழே விழுந்து உயிரிழந்துவிட்டதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அபிராமிபுரம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், காவல்துறை தரப்பில் விசாரித்த போது விசாரணைக்கு மூன்று முறை சமன் அனுப்பியும் அவர் ஆஜராகததால், நேரடியாகப் போலீசார் சென்று விசாரணைக்கு அழைத்ததாகத் தெரிகிறது. அப்போது அவரைச் செல்போனில் படம் பிடித்த போது என்னை ஏன் படம் பிடிக்கிறீர்கள் எனப் போலீசருடன் வாக்குவாதத்தில் கார்த்திகயேன் ஈடுபட்டதாகவும், அப்போது போலீசார் அவரை அழைக்கப் பிடித்தபோது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் அனைத்து காட்சிகளும் பதிவாகியுள்ளது. எனவே, காவல்துறையின் மீது எந்தத் தவறும் இதில் இல்லை எனவும் தெரிவித்தனர். மேலும் காவல்துறையின் மீது தவறு உள்ளதா அல்லது கார்த்திகேயனுக்கு ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா? என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பின்பு தான் தெரியவரும் என்பதால் 194 பிரிவின் கீழ் மாவட்ட நீதிபதி அல்லது துணை நீதிபதி தலைமையில் விசாரணை செய்யச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவுவிட்டு உள்ளார்.
இதனால், இன்று (ஏப்ரல் 10) கார்த்திகேயன் உடல் சென்னை ராயப்படை அரசு மருத்துவமனையில் மேஜிஸ்திரேட் முன்னிலையில் உடற்குறு ஆய்வு செய்யப்படும் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்