- By எஸ். ரவிச்சந்திரன்
சென்னை: ரயில் பயணம் எப்போதும் சுகமானது... அதிலும் சுகமானது புத்தகம் வாசித்துக் கொண்டே பயணிப்பது... புத்தகம் வாசிப்பது மனதிற்கு புத்துணர்வு அளிக்கும். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்துக் கொண்டே வருகிறது. தேடிச் சென்று புத்தகங்களை வாங்கி படித்த காலங்கள் கனவுகளாகி விட்டன.
புத்தகம் படிக்கும் பழக்கம் இன்றையை தலைமுறையினரிடம் உள்ளதா? இல்லை... இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு? என்று கேட்பவர்களுக்காக தமிழ்நாடு அரசு ஒரு ஏற்பாடு செய்துள்ளது. அதாவது, வாசிப்பவர்களின் அறிவு தேடலை பூர்த்தி செய்ய, பிரமாண்ட வசதிகளுடன் கூடிய ‘புத்தகப் பூங்கா’ அமைக்கப்பட்டுள்ளது. புத்தகப் பூங்கா எங்கே உள்ளது? என்னென்ன வசதிகள் உள்ளன? இது குறித்து மக்கள் கருத்து என்ன என்பது குறித்து இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்.

புத்தகப் பூங்கா எங்கே உள்ளது?
புத்தகம் படிக்கும் பழகத்தை ஊக்குவிப்பதற்காக, தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும், சென்னை சென்ட்ரலில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ‘புத்தகப் பூங்கா’ திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், அமைக்கப்பட்ட இந்த பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 10 ஆம் தேதி திறந்து வைத்தார்.
என்னென்ன வசதிகள் உள்ளன?
சுமார் 5,100 சதுர அடியில் பிரம்மாண்ட அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தகப் பூங்காவில், தமிழ் வரலாறு, உலக வரலாறு, இந்திய வரலாறு, மனையியல், சமூகவியல், உளவியல், வானியல், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், உயர் கல்வி நூல்கள், கீழடி தொடர்பான நூல்கள், செவ்வியல் நூல்கள், சிறார் நூல்கள், கதை, கவிதை உள்ளிட்ட 10 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களின் புத்தகங்களை விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தகப் பூங்கா செயல்படுகிறது. 75 பேர் அமரக் கூடிய வகையில் அற்புதமான அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தகப் பூங்காவிற்கு, நாள்தோறும் ஏராளமான பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இன்றைய தலைமுறையை காக்கும் புத்தகம்
இது குறித்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் சேலத்தைச் சேர்ந்த மாணவி ரேணுகா கூறுகையில், “மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது இன்றைய தலைமுறையை சமூக ஊடகங்களில் இருந்து காப்பதற்கு உதவும். எனக்கு நாவல் படிப்பது மிகவும் பிடிக்கும். ஏதோ ஒரு வகையில் அனைவருக்கும் இந்த புத்தகப் பூங்கா உதவும்” என்றார்.

தொடர்ந்து புத்தகப் பூங்காவை பார்க்க வந்த அருணா கூறுகையில், “மருத்துவம் தொடர்பான புத்தகங்களை வாங்குவதற்காக இங்கு வந்தேன். அனைத்து வகையான புத்தகங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. இங்கிருந்தால் நேரம் போவதே தெரியவில்லை. நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இது போன்று பொது இடங்களில் புத்தகங்களை வைக்கும் போது அனைவருக்கும் வாசிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்” என்றார்.
புத்தகப் பூங்கா குறித்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அலுவலர் பாலாஜி கூறுகையில், “இந்தப் புத்தகப் பூங்காவில் அகராதி முதல் அனைத்துப் புத்தகங்களும் உள்ளன. மேலும் பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகத்தால் அச்சிடப்படும் புத்தகங்களும் கிடைக்கும்.
மேலும், தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட அயல்நாட்டு மொழி புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. புத்தகங்களை, ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரை பொதுமக்கள் வாங்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தற்பொழுது 11-க்கும் மேற்பட்ட புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், தங்களின் புத்தகங்களை வைத்து விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்