சென்னை: தாய்லாந்து மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 7.9 கோடி ரூபாய் மதிப்புடைய கொக்கையின் மற்றும் உயர் ரக கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை நடத்தினர். அப்போது ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நகரில் இருந்து துபாய் வழியாகச் சென்னைக்குச் சுற்றுலாப் பயணிகள் விசாவில் வந்தார்.

அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அந்தப் பெண் பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அந்த பயணி முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தார். இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது, அந்தப் பெண்ணின் உள்ளாடைக்குள் ஒரு பொட்டலம் மறைத்து வைத்திருந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து, அந்தப் பொட்டலத்தை ஆய்வு செய்ததில் 460 கிராம் கொக்கையின் போதைப் பொருள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். மேலும் அந்தப் பெண்ணின் வயிறு சாதாரணமாக இல்லாத வகையில் பெரிதாகக் காணப்பட்டதால் அதிகாரிகள் அந்தப் பெண்ணை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றுக்குள் போதைப்பொருள் கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அந்த பெண்ணை உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு வயிற்றுக்குள் இருந்த கேப்சூல்களை ஒவ்வொன்றாக மருத்துவக் குழுவினர் வெளியில் எடுத்தனர். மொத்தம் 12 கேப்சூல்களில் 150 கிராம் கொக்கையின் போதைப் பொருள் இருந்தது. தொடர்ந்து, அந்த இளம் பெண்ணிடம் இருந்து மொத்தம் 610 கிராம் கொக்கையின் போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.6.1 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் ஜாம்பியா நாட்டு இளம்பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. எனவே, சென்னையில் இவர் யாரிடம்? இந்த போதைப் பொருளைக் கொடுக்க கடத்தி வந்தார்? என்று சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காங்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அவர்கள் அனைவரையும் சோதனை செய்து வந்தனர். மேலும் அதில் வந்த சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரின் உடைமைகளை மோப்ப நாய்கள் வைத்து சோதனை செய்தனர்.
அப்போது அவரது உடமையில் போதைப்பொருள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரின் உடமையை சோதித்த போது அதில் பதப்படுத்தப்பட்ட உயரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மொத்தம் அவரிடம் இருந்து 1.816 கிலோ உயர் ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1.8 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'கைதிகளுக்குச் சிறைக்குள் தண்டனையை அளிக்காதீர்கள்'; தமிழ்நாடு சிறைத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்! |
இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த ஆண் பயணியையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில், தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்குப் பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்