சென்னை: சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் சுற்றித்திரியும் பறவைகளை விரட்ட ‘தண்டர் பூம்ஸ்’ எனப்படும் இடி ஒலி எழுப்பக்கூடிய கருவிகளைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வதாக பெரும்பாலான மக்கள் சென்னை விமான நிலையத்தை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில், கடந்த 2 வருடங்களாக விமான பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையம் வந்து செல்கின்றனர்.
விமான பயணிகளின் வசதிக்காக நாள்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் என 400க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கிறது. அதற்காக, சென்னை விமான நிலையத்தில் வருகை மற்றும் புறப்பாடு என இரண்டு ஓடு பாதைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் பறவைகள் தொல்லை இருந்து வருகிறது. அதாவது, விமானங்கள் தரையிறங்கும் போதும், மேலெழும்பும் போதும் இந்த பறவைகள் இடையூறாக இருந்து வருகிறது. மேலும், விமானங்கள் பறக்கும் போது, பறவைகள் விமானத்தில் சிக்கிக்கொண்டால் பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
அதனால், பறவைகளை விரட்டுவதற்காக சென்னை விமான நிலைய ஆணையம், தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமித்துள்ளது. அவர்கள், விமான ஓடுபாதையில் உள்ள பறவைகளை பட்டாசு வெடித்து விரட்டி வருகின்றனர். பல ஆண்டுகளாக, சென்னை விமான நிலையத்தில் உள்ள பறவைகளை விரட்ட இந்த செயல்முறையை தான் செய்து வருகின்றனர்.
AAI Chennai Airport has inducted 30 hand-held thunder booms (a bird scaring equipment) and 2 battery-operated tipping carts to further enhance airside safety and operational efficiency. pic.twitter.com/pcxOiXRIA0
— Chennai (MAA) Airport (@aaichnairport) June 3, 2025
ஆனால், இதில் சில சிக்கல்கள் உள்ளது. என்னதான் பட்டாசு வெடித்து பறவைகளை விரட்ட முயற்சி செய்தாலும், அவற்றை முழுவதுமாக விரட்ட முடிவதில்லை எனவும், பறவைகள் மீண்டும் வந்து ஓடு பாதைகளில் உள்ள விமானங்களுக்கு இடையூறு செய்து வருகிறது எனவும் விமான நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, பட்டாசு வெடிப்பதால், சிலநேரத்தில் காய்ந்த புல்லில் பட்டு தீ விபத்து ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ''மதுரை அருகே இப்படி ஒரு சிவன் கோயில் இருந்ததா?" - ஆச்சரியங்களை அள்ளிக்கொடுத்த கல்வெட்டு! |
இதற்கு முடிவு கட்ட, இந்திய விமான நிலைய ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியில் பட்டாசுகளை வெடித்து பறவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ‘தண்டர் பூம்ஸ்’ எனப்படும் இடி ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக 30 தண்டர் பூம்ஸ் கருவிகள் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அலுவலர்களிடம் பேசியபோது, “இந்த கருவிகளை பயிற்சி பெற்ற ஒப்பந்த ஊழியர்கள் மூலம் விமான நிலைய ஓடு பாதைகள் அருகே இந்த கருவி மூலம் ஓசையை எழுப்பி பறவைகள் விரட்டியடிக்கப்படும். இதனால், விமான சேவைகளில் எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் இருக்கும்.
மேலும் பட்டாசுகளுக்கு பதிலாக இந்த கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படாது. பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் தீ விபத்துகளும் தவிர்க்கப்படும்,” என்று கூறினர்.
விமான நிலையத்தில் உள்ள பறவைகளை பட்டாசுகள் வெடித்து விரட்டி வந்த நிலையில், அதில் முழுமையான தீர்வு கிடைக்காத நிலையில், இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.