சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்னை சிங்கம் ஐபிஎல் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது, நீங்கள் என்ன பிரச்னையை சந்திக்கிறீர்கள் எனக் கண்டுபிடித்து, அதற்கு உடனடியாக காவல்துறையினர் தீர்வு காண்பார்கள் எனவும், இந்த செயலில் வருங்காலத்தில் திருவிழாக்கள் போன்று கூட்டம் அதிகமாக சேரும் இடங்களில் விரிவுபடுத்தப்படும் எனவும் சென்னை மாநகர கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அதில், சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், போட்டி நடைபெறுவதற்கு முன்பு சென்னை மாநகர காவல்துறை சார்பில் முதன் முறையாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏஐ (AI) தொழில்நுட்பம் கட்டுப்பாட்டு அறையை, சென்னை மாநகர கூடுதல் ஆணையர் கண்ணன், சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார், திருவல்லிக்கேணி மாவட்ட காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர கூடுதல் ஆணையர் கண்ணன், "சென்னை சிங்கம் ஐபிஎல் கியூ ஆர் குறியீடு (Chennai Singam IPL QR Code) செயலியை சென்னை காவல்துறை உருவாக்கியுள்ளது. இந்த செயலி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடக்கும் போது, குற்ற நடவடிக்கைகள் நடக்கக் கூடாது என்பதற்காகவும், போட்டி நடக்கும் போது என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, 40 ஆயிரம் பேர் உள்ளே இருக்கிறார். இவர்களுக்கு ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படுகிறதா? என்பதையும் கண்காணிக்கிறது. சென்னை சிங்கம் ஐபிஎல் கியூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்யும்போது, நீங்கள் என்ன பிரச்னையை சந்திக்கிறீர்கள் எனக்காட்டும், அதன் மூலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள்.
இதையும் படிங்க: போலி ஹால்மார்க்கிங் செய்யப்பட்ட ரூ.4.8 கோடி மதிப்புள்ள 5.4 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - பண்ருட்டியில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி!
கடந்த 28ஆம் தேதி நடந்த போட்டியில் கிரிக்கெட் பார்வையாளர்கள் கவனத்தை திசை திருப்பி செல்போன்களை திருடிச் சென்றதாக இந்த செயலி மூலமாக எங்களுக்குப் புகார்கள் வந்தது. அதனைத் தொடர்ந்து ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திருட்டு கும்பலைக் கைது செய்தோம்.
இந்த செயலியின் மூலம் ஏதேனும் பாதுகாப்பு குறைகள் இருந்தாலும், எங்கேயாவது கூட்ட நெரிசல் ஏற்பட்டாலும், வேறு எதாவது பிரச்னை ஏற்பாட்டாலும் கூட தெரிந்துவிடும். குறிப்பாக, ஒரு நபரின் புகைப்படத்தை வைத்து, அந்த நபரை ஏஐ தொழில்நுட்பம் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.
காவல்துறையினர் சார்பில் 250 கேமராக்கள் அமைத்து, ஏஐ தொழில்நுட்பம் மூலம் கண்காணித்து வருகிறோம். இந்த தொழில்நுட்பம் இன்னும் பெரிதளவில் பரப்பப்படும். அதாவது, திருவிழாக்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவை நடக்கும் இடங்களில் எல்லாம் வரும் காலங்களில் விரிவுபடுத்தப்படும்," எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்