சென்னை: சிறுநீரக மோசடி மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில் மருத்துவர் வி.எம். கணேசன், அவரது மனைவி உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2011 முதல் 2013 வரையிலான காலத்தில் நூற்றுக்கணக்கான ஏழை மக்களிடம் சிறுநீரக திருட்டு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக தருமபரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
காவல்துறை விசாரணையில், மேற்கூறப்பட்ட மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட பிரபல தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் வி.எம். கணேசன் பணியாற்றியுள்ளார். இவர் சில மருத்துவர்கள் மற்றும் இடைத்தரகர்கள உடன் இணைந்து சிறுநீரகக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கபட்டது.

இதனைத் தொடர்ந்து மருத்துவர் கணேசன் உள்பட கைது செய்யபட்டனர். இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை கடந்த 2015-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
அமலாக்கதுறை தனது குற்றபத்திரிகையில் மருத்துவர் வி.எம்.கணேசன், அவரின் மனைவி என். விஷ்வபிரியா, மருததுவர் ஜி. திருமால் ஆகியோர் முறைகேடாக 81 நபர்களிடம் இருந்து சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளனர் எனவும், இதன் மூலம் சுமார் 3 கோடி ரூபாய் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க |
இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று மருத்துவர்களும் நேரில் ஆஜராகினர்.
அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கின் சாட்சி விசாரணை வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்த நீதிபதி, விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.