‘தமிழக பா.ஜ.க தலைவர்; தேர்தல் கூட்டணி’ ஸ்கெட்ச் போட சென்னை வந்த அமித் ஷா!
பரபரப்பான அரசியல் சூழலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார்.


Published : April 11, 2025 at 8:43 AM IST
சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு 11:20 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள ஒன்றிய அமைச்சரை, விமான நிலையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி, சட்டப் பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதையடுத்து வரவேற்பை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டு சென்றார். இவர் வருகையை ஒட்டி சென்னை விமான நிலையம் முதல் அவர் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களை அமித் ஷா தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு, இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டு செல்லும் அவர், அங்கிருந்து பா.ஜ.க மாநில தலைவர் யார் என்பதை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால், கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறவுள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரடியாக சந்தித்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| இதையும் படிங்க |
இந்த சந்திப்புகளுக்கெல்லாம் பிறகு இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார் என தமிழ்நாடு பா.ஜ.க தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்

