தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.
மேலும், தற்போது வானம் மேகமூட்டம் மற்றும் தொடர் பனிப்பொழிவு காரணமாக அறுவடை நெல்லை உலர வைப்பதில் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை தமிழ்நாடு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதினார்.
இதையும் படிங்க: பெரியார் பற்றி இனிமேல் தான் அதிகம் பேசுவேன்...முற்றுகை போராட்டம் குறித்து சீமான் பேட்டி!
இதையடுத்து மத்திய அரசு தமிழ்நாட்டில் மழை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் பாதிப்பின் உண்மை நிலையை கண்டறிய உயரதிகாரிகள் நவீன், பிரீத்தி, டி.எம். ராகுல், அபிஷேக் பாண்டே ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அறிவித்தது.
இதையடுத்து, இக்குழுவினர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கக்கரை, புலவன்காடு, தெலுங்கன் குடிக்காடு, புதூர் ஆகிய நெல் கொள்முதல் நிலையத்தில் இந்திய உணவுக் கழகத்தின் சென்னை மண்டல அதிகாரிகளுடன் நெல் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட உயர் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து விவசாயி சுகுமாரன் கூறுகையில், இன்று மத்திய குழு வந்து ஆய்வு நடத்தியுள்ளனர். எப்போதும் நாங்கள் 17 சதவீதத்தில் தான் நெல் கொடுத்து வருகிறோம். ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறோம். கடந்த நாட்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால் எங்களால் இந்தாண்டு 17 சதவீத ஈரப்பத்தில் நெல்லை கொடுக்க முடியாது. எனவே மத்திய அரசு நெல் கொள்முதலை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்'' என கோரிக்கை வைத்தார்.