சென்னை: பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் பணியாற்றியவர்களுக்கான, மாபெரும் குறை தீர்க்கும் முகாம், ஜூன் 30 அன்று திருச்சியில் நடைபெற உள்ளதாக பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் ஜெயசீலன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் முப்படைகளான ராணுவம், கடற்படை, விமானப்படைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களின் குறைகளை கேட்கும் விதமாக குறைதீர்க்கும் முகாம் திருச்சியில் நடைப்பெற உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் ஜூன் 30-ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை குறை தீர்ப்பு முகாம் நடைப்பெற உள்ளது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்று ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் உள்ள பிரச்சினைகளை தெரிவிக்க உள்ளார்கள்.
இவர்களுக்கு பத்து நிமிடங்களில் பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்பட்டு உடனடியாக அவர்களுக்கு காசோலை வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கிராமம் தோறும் வீடுகளுக்கு சென்று அவர்களுடைய குறைகளை தீர்க்கும் வகையில் 4 நடமாடும் ஓய்வூதிய குறை தீர்க்கும் வாகனத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மேலும், இந்த முகாமில் ஓய்வூதியர்களுக்கு காசோலையும் மத்திய அமைச்சர் வழங்குகிறார். குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொள்பவர்கள், அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் போன்ற உரிய சான்றுகளின் அசல், நகலுடன் நேரடியாக வந்து கலந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க |
இந்த முகாமில் கலந்து கொள்வதற்கு தனியாக ஒரு வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8807380165 என்ற எண்ணில் உங்களுடைய பெயரை அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் ஓய்வூதியர்களுக்கு முகாமில் முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் முப்படையைச் சேர்ந்த 2 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகிறார்கள். மேலும், 66,000 குடும்ப ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுகிறார்கள்,” என்று கூறினார்.
இதில் கலந்து கொள்வதற்காக திருச்சிராப்பள்ளி பேருந்து நிலையம், ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு வாகனம் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜெயசீலன், வருபவர்களுக்கு போதிய உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறந்த முறையில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.