சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கின் விசாரணை, மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ பதிலளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி, கள்ளச்சாராயம் குடித்து சுமார் 69 பேர் மரணம் அடைந்தனர். தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை முதலில் போலீஸார் விசாரித்த நிலையில், பின்னர் அது சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்தது.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்களில் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனிடையே, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள கன்னுக்குட்டியும், தாமோதரன் ஆகியோரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவானது, நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ தரப்பு, கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பான வழக்கு 3 மாதங்களில் விசாரித்து முடிக்கப்படும் என்றும், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் வாதிட்டது.
அதே சமயத்தில், மனுதாரர்கள் 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், நீதிமன்றம் விதிக்கக்கூடிய அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க தயாராக இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் அவர்களின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கில் எத்தனை பேர் இன்னும் விசாரணையில் உள்ளனர் என்பது தொடர்பாக பதிலளிக்க சிபிஐ தரப்பிற்கு உத்தரவிட்டு, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
