சென்னை: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த சேகர், கார்த்திகேயன், சாந்த மூர்த்தி உள்ளிட்டோர் தங்கள் உறவினரின் இறப்புக்கு சென்றுவிட்டு, கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி வாகனத்தில் ஊர் திரும்பி உள்ளனர். அப்போது ஒருவரின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி செய்வதற்காக, சேகர் உள்ளிட்டோர் சாலையின் நடுவே வாகனத்தை உடனே நிறுத்தியுள்ளனர். அப்போது, பின்னால் வந்த வாகனத்தில் இருந்த நபர், தான் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் கணவர் எனவும், அவசரமாக செல்ல வேண்டும் என்பதால் வாகனத்தை உடனே அப்புறப்படுத்தமாறும் மிரட்டியுள்ளார்.
மேலும், வாகனத்தை அகற்ற தாமதமானதால், தகாத வார்த்தைகளால் திட்டியும், சாதி பெயரை சொல்லி அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர் நீதிபதியின் கணவருக்கு ஆதரவாக, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த சேகர் உள்ளிட்டோர் பிரச்சனை செய்ததாகக் கூறி, திண்டிவனம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: சுங்கச்சாவடி வைப்பதால் மக்களுக்கு என்ன பயன்? நீதிமன்றம் அதிரடி கேள்வி!
அதேவேளையில், தங்களை அவதூறாக பேசியதாக நீதிபதியின் கணவர் மீது அளித்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை. எனவே, காவல்துறையின் விசாரணையில் திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கமலா தலையீடு இருப்பதாக கருதுவதால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி திண்டிவனத்தை சேர்ந்த சேகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்