தஞ்சாவூர்: பொதுவாக வளர்ப்பு பிராணிகளான ஆடு, மாடு, நாய், கோழிகளை ஆகியவற்றை திருடிச் செல்வதை அறிந்திருப்போம். ஏனெனில் இவைகளை திருடி எடுத்துச் செல்வதும், ஏற்றிச் செல்வதும், விற்பனை செய்வதும் எளிதான காரியம். ஆனால் இதுவரை கேள்விப்படாத வகையில் தஞ்சையில் சர்க்கஸ் கூடாரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை மர்ம நபர் திருடி சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் வேட்டமலிக்களத்தை அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் அழகர். சர்க்கஸ் கலைஞர். இவர் தனது மகன்கள், குடும்பத்தினர் என 10 பேருடன் ஊர், ஊராக சென்று சர்க்கஸ் நடத்தி வருகிறார். சர்க்கஸில் தற்போது போதிய வருமானம் கிடைக்காத நிலையில், அழகர் வேறு எந்த கலைஞர்களையும் தனது சர்க்கஸ் கூடாரத்தில் சேர்க்காமல் தனது குடும்பத்தினரை மட்டுமே வைத்து சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
ஒவ்வொரு கிராமமாக சென்று அங்கு ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்துவது வழக்கம். அதன்படி தஞ்சையை அடுத்த கீழவஸ்தாச்சாவடி பகுதிக்கு வந்த அழகர் அங்கு கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்தி வந்தார்.
இந்த சர்க்கஸில் குழந்தைகள், சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் ஒட்டகம் மற்றும் குதிரை போன்றவற்றை பயன்படுத்தி வந்துள்ளார். இதனைப் பார்த்து சிறுவர்கள் மகிழ்ச்சியில் குதூகளிப்பது உண்டு. இதில் ஒட்டகமும், குதிரையும் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்து வந்தன.
சர்க்கஸ் முடிந்ததும் ஒட்டகத்தை சர்க்கஸ் கூடாரத்தின் ஒரு பகுதியில் கட்டி வைப்பது வழக்கம். அதன்படி கடந்த 15ம் தேதி இரவு சர்க்கஸ் காட்சி முடித்து விட்டு ஒட்டகத்தை கூடாரத்தின் ஒரு பகுதியில் வழக்கமாக கட்டி வைக்கும் இடத்தில் கட்டி வைத்தனர். பின்னர் கலைஞர்கள் அனைவரும் படுத்து தூங்கினர்.
இதையும் படிங்க: காதலியோடு வீட்டை விட்டு வெளியேறிய காதலருக்கு நேர்ந்த சோகம் - போலீசார் விசாரணை
மறுநாள் காலை எழுந்து பார்த்த போது கூடாரம் பகுதியில் கட்டி வைக்கப்பட்டு இருந்த ஒட்டகத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அழகர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் ஒட்டகத்தை தேடிப் பார்த்தனர், ஆனால் எங்கு தேடியும் ஒட்டகம் கிடைக்கவில்லை. இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் விஜய் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோயில் பகுதியில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் வேட்டி, சட்டை அணிந்த ஒருவர் ஒட்டகத்தை ஓட்டி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த காட்சிகளை வைத்து போலீசார் மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து அழகர் மகன் விஜய் கூறுகையில், '' ஒட்டகம் இல்லாமல் சர்க்கஸ் நடத்த முடியாமலும், பிழைப்பு நடத்த முடியாமலும் உள்ளது. ஒட்டகத்தை எங்காவது பார்த்தால் தங்களுக்கு தெரியப்படுத்துங்கள்'' என்று கேட்டுக் கொண்டார். திருடிச் செல்லப்பட்ட ஒட்டகம் அழகரின் சர்க்கஸில் கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.