விஜய் வீட்டுக்கு 2-வது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல்... போலீசிடம் சிக்கிய கல்லூரி ஊழியர்!
வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து கைதான நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published : October 9, 2025 at 5:29 PM IST
சென்னை: தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை நீலாங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சென்னை, நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இல்லத்தில் இன்று காலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தொலைபேசி மூலம் மிரட்டல் வந்துள்ளது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் இச் சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, உடனடியாகத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர், விஜய்யின் வீட்டை தீவிரமாகச் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில், அது ஒரு போலி மிரட்டல் எனத் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? அந்த நபரைக் கண்டறியும் பணியில் நீலாங்கரை காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது மேற்கொண்ட விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றும் சபிக் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சபிக்கை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து சபிக்கிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கரூரில் கடந்த செப்.27 ஆம் தேதி நடந்த தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தையொட்டி சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தவிர, விஜய்க்கு மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கரூர் சம்பவத்துக்கு அடுத்த நாளான செப்.28 அன்று விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அப்போது மோப்ப நாய் உதவியுடன் விஜய் வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதனை தொண்டர்ந்து இன்று இரண்டாவது முறையாக விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

