சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் பாஜக சார்பில் ஆபரேஷன் சிந்தூர் மூவர்ண யாத்திரை தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட குழுவினர் இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய செயலாளர் துஷாந்த் குமார், பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த நிர்வாகிகள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் ஆலோசனை கூட்டத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து சுதாகர் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாடு முழுவதும் நடைபெறும் மூவர்ண யாத்திரையில் பாஜகவினர் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் தேசப்பற்று கொண்டவர்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் என்ற பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவம், விமானம் மற்றும் கடற்படை உள்ளிட்ட முப்படையினரும் மிக தைரியமாக ஈடுபட்டனர். உலகம் முழுவதும் நம்முடைய தேசத்தின் வீரத்தை குறிப்பாக பாதுகாப்பு படையினரின் வீரத்தை வியந்து பாராட்டுகின்றனர். ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகாளால் காஷ்மீர் பெஹல்காமில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதைதொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் மே மாதம் 7 ஆம் தேதி அதிகாலை முதல் நம் பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியமாக தாக்கினர்.
இந்த தாக்குதல்களில் நூற்றுக்கான பாகிஸ்தான் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டார்கள். இது, வளர்ந்து வரும் இந்தியா நாட்டின் பாதுகாப்பு துறையின் திறமைக்கும் தயார் நிலைக்கும் கிடைத்த மிகப்பெரிய சான்றும் மற்றும் வெற்றியாகும். இந்த சூழலில் இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். குறிப்பாக திமுக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் கட்சியின் கொள்கைகளை தாண்டி இந்திய நாட்டுக்கும் பாதுகாப்பு வீரர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்.
தற்போது எதிர்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸில் தலைமை பதவியில் இருக்கும் சிலர் நம் நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களின் மன உறுதியை சீர் குலைக்கும் வகையிலும் தேச விரோத சக்திகளின் கருத்துகளை வலுமைப்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க: "கஞ்சா வியாபாரியை காட்டிக் கொடுன்னு...போலீஸ் மிரட்டுது" - கமிஷனர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்!
உலகளவில் நம் நாட்டின் கருத்தை பகிர ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை பல்வேறு நாடுகளுக்கு அரசு அனுப்புகிறது. இன்றைக்கு நடக்கும் இந்த யாத்திரை என்பது எங்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் எங்கள் தோழமை கட்சிகளுடன் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள், விவசாயிகள், மருத்துவர்கள் உள்பட அனைத்து துறை மக்களும் உற்சாகமாக பங்கேற்கிறார்கள். ஒட்டுமொத்த தேசத்தின் கருத்து தேசிய பாதுகாப்பு, நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு உறுதுணையாக உள்ளது," என்று சுதாகர் ரெட்டி கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.