சென்னை: பெண்களை ஆபாசமாக இழிவுப்படுத்திய விவகாரத்தில், இதுவரை அமைச்சர் பொன்முடி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) கூட பதியப்படவில்லை. ஆகையால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து தவறான முறையில் சித்தரித்துப் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மாநில செயலாளர் அஸ்வதாமன் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ள ஆபாச வார்த்தைகள் பல பத்திரிக்கைகளில் கூட வெளியிட முடியவில்லை, அவ்வளவு கொச்சையாக இருக்கின்றது. அது தமிழ்நாடு முழுவதும் கொதிப்பு அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அவர் மீது முதல் தகவல் அறிக்கை கூட இதுவரை பதிவு செய்யவில்லை.
காவல்துறையினர், அமைச்சர் பொன்முடி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்முடி ஆபாச கருத்துகள் பேசி தான் திராவிடத்தை, அதன் கொள்கைகளை வளர்த்ததாக அவரே சொல்கிறார். அவர் பேராசிரியராக இருக்கும் போது கூட இவ்வாறு பேசியுள்ளதாகவும், அடல்ட் கூட்டங்கள் நடத்தி அதில் இதுபோன்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் பேசியிருக்கிறார். திராவிட கொள்கை இவ்வாறு தான் வளர்ந்ததா? இதுதான் திராவிட கொள்கையா?
திமுக அவரை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது; ஆனால் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கவில்லை. ஒரு கிராமத்தில் அவரது சட்டையில் சேறு பட்டதற்கே ஒரு பெண்ணை தொடக்கூடாத இடங்களில் தொட்டு, பாடாகப்படுத்தி சித்திரவதை செய்தனர். அதுமட்டுமின்றி, அந்த ஒட்டுமொத்த கிராமத்தையும் காவல்துறையினர் சித்திரவதை படுத்தினார்கள். ஆனால் இவர்களால் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
இதையும் படிங்க: மாநில சுயாட்சியை மீண்டும் கையில் எடுக்கும் திமுக - பின்னணி என்ன? |
அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்படவில்லை என்றால் நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர கோரிக்கை விடுப்போம். காவல்துறை புகார் மனுவைப் பரிசீலிக்கக் கால அவகாசம் உள்ளது. அதற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நாங்கள் நீதிமன்றத்தை நாடி சட்டப்படி இதனைக் கொண்டு செல்வோம்,” என்று தெரிவித்தார்.
மேலும், “முதலமைச்சர் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் அல்லவா? ஆனால் தமிழ்ப்புத்தாண்டுக்கு வாழ்த்துக் கூறவில்லை. ஏனென்றால், தமிழ் என்றாலே திராவிடத்திற்குப் பிடிக்காது,” என்றார்.
முன்னதாக, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்து இழிவாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், கழக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அவர் வகித்து வரும் கட்சி பொறுப்பிலிருந்து விடுவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.