சென்னை: பண்ருட்டியில் போலி ஹால்மார்க்கிங் மூலம் நகைகளை விற்பனை செய்த நகைக் கடையில் இந்திய தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
இந்திய தர நிர்ணய ஆணைய சட்டம், 2016 பிரிவு 28 இன் படி, விதி மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில்,இந்திய தர நிர்ணய ஆணையத்தின் சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் குழு, இன்று (ஏப்ரல் 11) பண்ருட்டியில் உள்ள ஒரு நகைக் கடையில் அமலாக்கத் தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பிஐஎஸ் இயக்குநர் ஜீவானந்தம், இயக்குநர் முனிநாராயணா, இயக்குநர் ஸ்ரீ. ஸ்ரீஜித் மோகன் ஜே, ஸ்ரீ. ஹரீஷ் சம்பத், துறை அதிகாரி மற்றும் ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். பிஐஎஸ் HUID முத்திரை இல்லாமல் போலி ஹால்மார்க்கிங் செய்யப்பட்ட ரூ.4.8 கோடி மதிப்புள்ள 5.4 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படுவதற்கு முன்பு தங்க நகைகள் HUID உடன் ஹால்மார்க் செய்யப்பட வேண்டும் என்பதால், அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: 'லெமன் சிட்டி'க்கு ஒரு விசிட்! புவிசார் குறியீடு பெற்ற புளியங்குடி எலுமிச்சை! அப்படி என்ன 'ஸ்பெஷல்'?
நுகர்வோர்கள் உண்மையான ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், BIS Care என்ற மொபைல் செயலியில் HUID எண்ணை டைப் செய்வதன் மூலம் ஹால்மார்க்கிங்கின் நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம். இது குறித்து பேசிய மூத்த இயக்குநர் மற்றும் சென்னை கிளை அலுவலகத்தின் தலைவர் ஜி. பவானி, "போலி ஹால்மார்க் முத்திரை தொடர்பான விவகாரத்தில் குற்றவாளிக்கு எதிராக இந்திய தர நிர்ணய அமைவனம் , சென்னை கிளை அலுவலகம் நடவடிக்கை எடுக்கும். இந்தக் குற்றத்திற்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 1,00,000/-க்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும்.
எனவே, HUID இல்லாமல் ஹால்மார்க் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் கண்டறிந்தால், பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600113 என்ற முகவரிக்கு தெரிவிக்க வேண்டும். BIS Care மொபைல் செயலியைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது hcnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ புகார் அளிக்கலாம். மக்கள் அளிக்கும் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்,"என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்