திருப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி 17 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு மட்டுமின்றி நாடு முழுக்க உள்ள விராட் கோலியின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்த நிலையில், கோப்பையை கைப்பற்றியதற்கு பெங்களூரு அணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (ஜூன்.4) கொண்டாட்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றி கொண்டாட்டத்தை காண ரசிகர்களுக்கு டிக்கெட் விநியோகமும் செய்யப்பட்டது. ஆனால், ஆர்சிபி வீரர்களை காண டிக்கெட் கிடைக்காத லட்சக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்துக்கு முன்பு குவிந்தனர்.
கட்டுக்கடுங்காத அந்த கூட்டத்தில் சிக்கி மூச்சு விட முடியாமல் பலர் மயங்கி விழுந்தனர். சிலர் கீழே விழுந்து மிதிபட்டனர். இதில் 11 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த காமாட்சி தேவியும் (28) ஒருவர். காமாட்சி தேவி பெங்களூரு ராமமூர்த்தி நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
'கோலியின் தீவிர ரசிகை'
விராட் கோலியின் தீவிர ரசிகையான இவர் வெற்றி கொண்டாட்டத்தை காண அலுவலகத்தில் இருந்து நேராக சின்னசாமி மைதானம் முன்பு வந்துள்ளார். முன்னதாக ஸ்டேடியத்திற்குள் செல்ல வழங்கப்பட்ட டிக்கெட் இவருக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், விராட் கோலியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்பதற்காக அலுவலகத்தில் இருந்து தனியாக புறப்பட்டு ஸ்டேடியம் வந்துள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், காமாட்சி தேவியின் உடல் இன்று மதியம் 2 மணியளவில், சொந்த ஊரான உடுமலைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதன்படி, அவரது உடல், அவரது தந்தை தாளாளராக உள்ள உடுமலை மயிலாடியில் உள்ள விவேகானந்தா பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு காமாட்சி தேவியின் உடல் உடுமலைப்பேட்டை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சனையில் ஆடிட்டருக்கு என்ன வேலை? ராமதாஸை சந்தித்த பிறகு குருமூர்த்தி அளித்த பதில்!
காமாட்சி தேவியின் தோழி ஒருவர் ஆங்கில ஊடகத்தில் அளித்த தகவலின்படி, '' ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தை கேள்விப்பட்டதும் அதில் பங்கேற்க காமாட்சி மிகுந்த ஆவலுடன் இருந்தாள். அதற்காக அலுவலகத்தில் பெர்மிஷன் கேட்டவருக்கு மதியம் 2.30 மணிக்கு அனுமதி கிடைத்தது. அதன் பிறகு ''நான் மெட்ரோவில் சென்று கொண்டிருக்கிறேன்'' என்று குறுஞ்செய்தியை அனுப்பினாள். அதுதான் அவள் அனுப்பிய கடைசி குறுஞ்செய்தி'' என்று தெரிவித்த அந்த தோழி, அவளுடைய மடிக்கணினியும், பையும் அலுவலக மேசையில் தான் உள்ளன. ஆனால், அவள் மட்டும் இல்லை'' என உருக்கமாக கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்