மதுரை:முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் மதுரையில் மதநல்லிணக்கத்துக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இந்து முன்னணிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மத நல்லிணக்கக் கூட்டமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், "இந்து முன்னணி சார்பில் 'குன்றம் காக்க கோவிலை காக்க' என்ற தலைப்பில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. முடிந்து போன திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு இதுவரை மாவட்ட ஆட்சியர், போலீஸ் உள்ளிட்டோரிடம் அனுமதி பெறவில்லை. ஆனால், மாநாட்டுக்கான அழைப்பிதழ், மாநாடு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சமூக வலைதளங்கள், சுவர் விளம்பரம் என விளம்பரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜூன் 22ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடத்தப்பட உள்ள இந்த மாநாடு என்பது ஆன்மிக மாநாடு அல்ல. மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உதகையில் 'ஜாலி ரைடு' வந்த ஒற்றை காட்டு யானை - அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதால் மக்கள் நிம்மதி!
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டையும் மதநல்லிணக்க மண்ணாக திகழும் மதுரையையும் குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களைப் போல இரு சமூகத்தினரிடையே விரோதப்போக்கை வளர்க்கும் விதமாக பயன்படுத்த இந்துமுன்னணி திட்டமிட்டுள்ளது. எனவே, மாநாட்டை தடை செய்ய வேண்டும்,"என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதநல்லிணக்கக் கூட்டமைப்பின் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,"அண்மையில் மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவில் மத விரோத சக்திகள் தமிழ்நாட்டில் வெற்று கலாசாரத்தை விதைக்க முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார். எனவே, மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மாநாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது.
மதவெறி வெறுப்புப் பேச்சுகளை தடுக்கவும் மக்கள் மத்தியில் சகோதரத்துவம் மத நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடமாநிலங்களில் ராமரை வைத்து அரசியல் செய்ததைப் போல தமிழ்நாட்டில் முருகரை வைத்து அரசியல் செய்யலாம் என்று இந்து முன்னணி நினைக்கிறது. அதற்கு இடம் தரக் கூடாது,"என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.