கோயம்புத்தூர்: ஒரு பகுதியை எல்லையாக நிர்ணயித்து வாழும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்தால், அச்சூழலில் அவை பிழைக்க வாய்ப்பு குறைவு. பயிர் சேதம் ஏற்படுத்தும் யானைகளை இடமாற்றம் செய்வது, மனித - யானை மோதலுக்கு தீர்வாக அமையாது என உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வன தினம்:
ஆண்டுதோறும் மார்ச் 21-ஆம் தேதி 'சர்வதேச வன தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, வடகோவை பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில், யானை - மனித மோதல் தடுப்பு குறித்து ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கம் இன்று (மார்ச் 21) நடைபெற்றது.
இதில், மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார், ஆராய்ச்சியாளர்கள் நவீன், பீட்டர் ஆகியோர் கலந்துக்கொண்டு, யானை - மனித மோதல்களுக்கான காரணம் மற்றும் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார் பேசியதாவது, “கோவை வனக்கோட்டம் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் மனித - வனவிலங்கு மோதல்களை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுக்கரை பகுதியில் ரயில் மோதி ஏற்படும் விபத்துகளால் யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் ஏஐ கேமரா கண்காணிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.
தெர்மல் கேமரா மூலம் கண்காணிப்பு:
இதனால், கடந்த ஆண்டு ரயிலில் அடிபட்டு ஏற்படும் விபத்துகளில் யானைகள் உயிரிழக்கவில்லை. மதுக்கரை, மருதமலை, பொன்னூத்து அம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் தெர்மல் கேமரா மூலம் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வருவது கண்டறிந்து, வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
மனித - யானை மோதல்களை தடுக்க வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. எல்லையோரத்தில் வாழை, தென்னை போன்ற பயிர்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன. இவை மனித - யானை மோதலுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. தடாகம் பகுதியில் பயிர் சேதங்களை ஏற்படுத்தி வரும் யானை நடமாட்டம் குறைந்துள்ளது.
வனவிலங்குகள் இடமாற்றம் தீர்வாகுமா?
ஒரு பகுதியை எல்லையாக நிர்ணயித்து வாழும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்தால், அச்சூழலில் அவை பிழைக்க வாய்ப்பு குறைவு. பயிர் சேதம் ஏற்படுத்தும் யானைகளை இடமாற்றம் செய்வது, மனித - யானை மோதலுக்கு தீர்வாக அமையாது. வன எல்லையோரங்களில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. வனவிலங்குகள் குறித்த தவறான புரிதல்களை போக்க, கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தெர்மல் கேமிரா செயல்பாடு:
கடந்த 2020 முதல் 2024 வரையிலான காலத்தில் மொத்தம் 14,962 முறை காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்துள்ளன. போளுவாம்பட்டி, தடாகம், பெ.நா.பாளையம், கல்லார், சிறுமுகை ஆகிய பகுதிகள் அதிக மனித - யானை மோதல் உள்ள பகுதியாக உள்ளன. மனித - யானை மோதல்களை தடுக்கவும், ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும், வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவதை, தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தந்தம் கடத்தல் வழக்கில் 'விசாரணைக்கு' அழைத்துச் செல்லப்பட்டவர் மாயம்! மேலும் 29 பேரின் கதி என்ன? |
தெர்மல் கேமரா அகச்சிவப்பு கதிர்வீச்சை புலப்படும் ஒளியாக மாற்றி காட்டும் கேமராவாகும். இதன் மூலம் வெப்பப் பகுதிகளைப் பார்க்க முடியும். இந்த கேமரா மூலம் காட்டு யானையின் உடல் வெப்பத்தை கொண்டு, அதன் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய உதவும். தமிழ்நாட்டில் முதல்முறையாக தெர்மல் கேமரா மூலம் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள வனப்பணியாளர்களுக்கு தகவல் அளித்து, காட்டு யானைகளை எளிதாக மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட முடியும். இதனால் தொலைவில் உள்ள யானைகள் நடமாட்டத்தையும் கண்காணிக்க முடியும். யானைகள் அதிகம் வெளியே வரும் பகுதிகளில் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காட்டு யானைகள் வெளியே வருவதற்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.