சென்னை: நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றால் சங்க கட்டட கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் என்பதால் தான் நிர்வாகிகள் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டதாக நடிகர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நிர்வாகிகள் பதவிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2025 மார்ச் 19ம் தேதியுடன் முடிவடைந்தது. முன்னதாக கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்தும், அந்த பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரியும், தேர்தலை உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து நடத்த கோரி நடிகர் நம்பிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர்கள் சங்கம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், "நடிகர் சங்க கட்டடத்திற்கான கட்டுமான பணிகள் 25 கோடி ரூபாய் செலவில் தொடங்கபட்டு 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. நிர்வாகிகளின் பதவிக் காலம் மார்ச் மாதம் முடிவடைய இருந்த நிலையில் 2025-2028 காலத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வேலைகள் துவங்கினால், சங்கத்தின் கட்டட கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும். அதனால், பொதுக்குழு, செயற்குழுவில் தற்போதைய நிர்வாகிகளுடைய பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனநாயக அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டதாகவும், பொதுக்குழுவிற்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளதாகவும் விஷால் தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், "பதவி கால நீட்டிப்பில் எந்தவித விதி மீறலும் இல்லை. விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு தீர்மானத்தில் 300 பேர் கையொப்பம் அளித்துள்ளனர். அதற்கான ஆவணம் பதிவுத்துறை பதிவாளரிடம் தாக்கல் செய்யபட்டுள்ளதால், இந்த வழக்கு உள்நோக்கத்துடனும் தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என நடிகர் விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, இரு தரப்பினரின் விரிவான வாதத்திற்காக வழக்கை ஜூன் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.