மயிலாடுதுறை: 'காவல்துறை உங்கள் நண்பன்' என்ற வாசகத்திற்கு ஏற்ப மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சீர்காழி தாலுக்கா திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் பைரவி. சிறு வயது முதல் வாத நோயால் ஒரு கால் ஒரு கை பாதிக்கப்பட்டவர் ஆவார். எனவே இவரால் சீராக மற்றவர்களை போல நடக்க இயலாது. திடீரென கால்களில் வலியுடன் நடக்க முடியாமல் சிரம்பபடுவார்.
எனவே, மாற்றுத்திறானிகள் அணியும் காலனி (ஷூ) வாங்குவதற்காக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பைரவி படி ஏறும் போது, அவரது கால் நரம்பு பிடித்த இழுத்ததால் நடக்க முடியாமல் கீழே விழுந்துள்ளார். அப்போது அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த சந்தியா என்ற ஆயுதப்படை பெண் காவலர் ஓடோடி சென்று அந்த பெண்ணை கீழே விழாமல் தாங்கிப் பிடித்து பிடித்தார்.
இதையும் படிங்க: ஆடையை பளபளப்பாக்குறோம்... ஆனா எங்க வாழ்க்கை...? கண்ணீர் விடும் சலவை தொழிலாளர்கள்!
இதனைத்தொடர்ந்து அவரது காலை நீவி விட்டு, அவரது பரிதவிப்பையும் வேதனையையும் போக்கினார். மேலும் அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து முதலுதவி செய்துள்ளார். அப்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவர் பைரவிக்கு முதலுதவி செய்தார். பைரவியால் நடக்க முடியாததால் போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் காலனியை பெற்றுக் கொள்ளும்படியும், உடன் பாதுகாவலர் ஒருவரை அழைத்து வரும்படியும் பைரவிக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மாற்றுத்திறனாளி பெண் கீழே விழ இருந்த நிலையில், அவரை ஓடி சென்று தூக்கி அரவணைத்து ஆறுதல் கூறிய ஆயுதப்படை காவலரின் செயல் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய பெண் காவலர் சந்தியா, "மனுக்கொடுக்க வரும் மக்கள் சிரமம் இன்றி செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோம். இதுவும் என்னுடைய பணியில் ஒன்றுதான்,"என்று அடக்கத்துடன் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்