கரூர்: கரூரில் பல வழக்குகள் காவல் நிலையத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து முறையில் தீர்க்கப்பட்டு வருவதை காவல்துறை கண்காணிக்க வேண்டும் என பார் கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் மாரப்பன். இவர் நேற்று (ஜூன் 20) கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பார்த்து கோரிக்கை அளிக்க வேண்டும் என கூறி கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் வருகை தந்தார். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இவர்கள் சரியான கோரிக்கை மனுவினை தயார் செய்யாமல், எஸ்.பி-ஐ பார்க்க வேண்டும் என அலுவலகத்திற்குள் கூட்டமாக வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மாரப்பனிடம் கோரிக்கை மனு கையெழுத்துடன் கொடுத்தால் மட்டுமே, மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பார்க்க அனுமதி வழங்கப்படும். அதுவும் 5 பேர் மட்டுமே சென்று எஸ்.பி-ஐ பார்த்து, மனு அளிக்க முடியும் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது போலீசாரிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் மாரப்பன், “நான் 16 ஆண்டுகளாக வழக்கறிஞர் சங்க நிர்வாகியாக உள்ளேன். இதுவரை போலீசார் இந்த அளவுக்கு எங்கள் மீது அதிகாரம் செலுத்தி பார்க்கவில்லை. வழக்கறிஞர்களின் சுதந்திரத்தனை காவல்துறை கெடுக்கிறது.
அவர்களை போல் நாங்களும் மக்கள் பணியில் உள்ளவர்கள்தான்” எனக் கூறி அங்கிருந்த காவலர்களை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். இதைப் பார்த்த சக காவலர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் நடைமுறை குறித்து அவர்களிடம் விளக்கினர். பின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: வால்பாறையில் தாய் கண்முன் சிறுமியை கவ்விச்சென்ற சிறுத்தை; மண்டை ஓடு மீட்பு.. சோகத்தில் வடமாநில தொழிலாளர்கள்! |
அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோரிக்கை அளிக்க வந்தவர்களுள் 5 வழக்கறிஞர்களை மட்டும் காவல் கண்காணிப்பாளரை பார்க்க அனுமதித்தனர். இதையடுத்து, அவர்கள் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து தங்களது கோரிக்கையை கூறிவிட்டு வெளியேறினர். இதுகுறித்து, பேசிய வழக்கறிஞர் ஒருவர், “சமீப காலமாக கரூர் மாவட்டத்தில் போலி வழக்கறிஞர்கள் அதிகரித்துள்ளனர். அவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவர்கள் ஒரு வழக்கை காவல்நிலையத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து முறையில் தீர்வு கண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கையை முன்வைத்ததாக கூறினார். இந்த சம்பவத்தின்போது போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே எஸ்.பி. அலுவலகத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்