திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவரை சகமாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே நடந்த மோதலில், ஒரு மாணவர் மற்றொரு மாணவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதனால், படுகாயமடைந்த மாணவரை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பள்ளியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, மருத்துவமனையில் உள்ள மாணவர் நலமாக உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தீவிர தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் திருநெல்வேலி காவல் உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அரிவாளால் வெட்ட காரணம் என்ன?
தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ், "ஏற்கனவே பென்சில் கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாகவே மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான்.
பாதிக்கப்பட்ட மாணவருக்கு மொத்தம் மூன்று இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் லேசான வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர். மாணவன் புத்தகப் பையில் மறைத்து வைத்து அரிவாளை பள்ளிக்கு கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது," எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.