சென்னை: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டுக் குழு கூட்டம் இன்று (மார்ச் 22) சென்னையில் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கர்நாடகா, கேரளா மாநில தலைவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து தமிழக பாஜக சார்பில் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அதன்படி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை பகுதியில் உள்ள வீட்டின் முன்பாக கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர், அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் கருப்புக் கொடி போராட்டம் நடத்தி உள்ளோம். தமிழகத்திற்கும், பக்கத்து மாநிலத்திற்கும் பிரச்னைகள் இருந்து வருகிறது.
கேரளா மாநிலத்தோடு முல்லை பெரியாறு அணை பிரச்னை இருந்து வருகிறது. அந்த அணை நீர்மட்டத்தை உயர்த்த முடியாத நிலை இருக்கிறது. இதனால் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இதேப் போல தென்காசி மாவட்டத்தில் செண்பகவல்லி அணையை சரிப்படுத்தி விடுவோம் என்று திமுக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இதுவரை திமுக எதுவும் செய்யவில்லை. இந்த பிரச்னையால் 2 லட்சம் விவசாயிகள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வந்து குப்பைகளை கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து கழிவுகளையும் தமிழகத்திற்குள் கொட்டி வருகிறது கேரள அரசு. கர்நாடகாவுடனான காவிரி பிரச்சினை இதுவரை முடிவுக்கு வரவில்லை. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டியவை எதுவும் கிடைக்கவில்லை. அதனை பெற திமுக அரசு எதுவும் செய்யவில்லை.
ஆனால் கேரளா முதலமைச்சர், கர்நாடகா முதலமைச்சர் தமிழகத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு வந்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை தமிழக முதல்வரோடு சேர்ந்து அனைவரும் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் உரிமையை திமுக அரசு தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறது.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. தென்னிந்திய மாநிலங்கள் விகிதாச்சார அடிப்படையில் ஒரு சீட்டை கூட இழக்கப்போவதில்லை. தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. 7.17 சதவீதம் இருக்கிறது.
நாளை புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டாலும் கூட அதே சதவீதம் தான் இருக்கும். மாநிலத்திற்கிடையே பிரச்னைகள் இருக்கும்போது அதனை மறைத்துவிட்டு தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை திமுக நடத்தி வருகிறது. இதனையும், கண்டித்து பாஜக கருப்புக் கொடி போராட்டம் நடத்தி வருகிறோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. கொலைகள் நடக்காத நாளே இல்லை. ஊழல் நடக்காத துறையே இல்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தெலங்கானா முதல்வர் தற்போது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
அந்த மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் தமிழக முதல்வரோ சாதி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டும் என கூறி வருவது எந்த வகையில் நியாயம்?
தமிழக அரசின் பல பொய்கள் தற்போது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது எப்படி என்பதை தெலங்கானா முதல்வரிடம் தமிழக முதல்வர் கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து தமிழக முதல்வர் சிறு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை.
திமுக நடத்தும் அரசியல் டிராமாவுக்காக இந்த கூட்டம். இருந்தாலும் கூட்டத்தில் பஜ்ஜி, டீ சாப்பிட்டு தமிழகத்தின் உரிமைகள் குறித்து மற்ற மாநில முதல்வர்களுடன் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும்.
இதையும் படிங்க: "பவன் கல்யாண் கட்சி எம்.பி எங்கே போனார்?" - திமுக எம்.பிக்கள் வரவேற்ற நிலையில் திடீர் மாயம்!
அணை கட்டியே தீருவேன் என டி.கே.சிவக்குமார் பேசினார். இதனை எதிர்த்து ஒரு குரல் கொடுத்தாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்? திமுக எம்.பிக்கள் எதிர்ப்பை ஏன் பதிவு செய்யவில்லை?
கேரளாவுக்கு சென்ற போது செண்பகவல்லி அணையை சரி செய்ய மு.க.ஸ்டாலின் ஏன் கேட்கவில்லை? மாநிலத்தின் வளர்ச்சிக்காக பேசாமல் அதனை விட்டு கொடுத்துவிட்டார் முதல்வர் முகஸ்டாலின்.
வடஇந்தியர்களை திமுக இழிவாக பேசி வருவதால் தான் பிற மாநில முதல்வர்கள் வரவில்லை. டாஸ்மாக் முறைகேட்டில் கண்டிப்பாக அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்க உள்ளது. திமுக பகல் கனவு காணக்கூடாது. அமலாக்கத்துறை சும்மா விடாது." என, அண்ணாமலை கூறினார்.