மதுரை: முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தாலே போதும், கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போய்விடும் என்று மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆவேசமாக பேசியுள்ளார்.
மதுரை பாண்டி கோயில் அருகே இந்து முன்னணி சார்பில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கலந்துகொண்டார்.
மாநாட்டில் பேசிய பவன் கல்யாண் கூறியதாவது;
'நமது நம்பிக்கைக்கு அழிவில்லை'
என்னை மதுரைக்கு வரவழைத்தது, என்னை வளர்த்தது, துணிச்சல் தந்தது எல்லாமே முருகன் தான். கடவுள் முருகனுக்கும், மதுரைக்கும் அதிக நெருக்கம் உள்ளது. முருகனின் முதல் படை வீடும், ஆறாம் படை வீடும் மதுரையில் தான் உள்ளது. மதுரை மக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்தப் புண்ணியத்தில்தான் பசும்பொன் முத்துராமலிங்கர் மதுரையில் பிறந்தார். தென் தமிழகத்தின் மாபெரும் தலைவர் முத்துராமலிங்கர் முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார். முத்துராமலிங்கர் முருகன் அவதாரத்தில் வாழ்ந்து மறைந்தவர். அவரை தாழ்ந்து பணிந்து வணங்குகிறேன். நமது மதத்தின் நம்பிக்கைக்கு அழிவில்லை. யாராலும் அதை அழிக்க முடியாது. தீயவர்களை வதம் செய்து அநீதியை அழித்தவர் முருகப் பெருமான்.
'சாது மிரண்டால் காடு கொள்ளாது'
முருகன் மாநாட்டை ஏன் குஜராத்திலோ அல்லது உத்தர பிரதேசத்திலோ நடத்தாலமே என சிலர் கேட்கிறார்கள், இந்த சிந்தனை ஆபத்தானது. ஒருவர் இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள். இதனை நான் 14 வயதிலேயே எதிர்கொண்டுள்ளேன். எங்கள் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும், அவமரியாதை செய்யாதீர்கள். அரேபியாவில் இருந்த வந்த மதத்தை குறித்து கேள்வி கேட்க முடியுமா? அதற்கான துணிச்சல் இருக்கா? சீண்டி பார்க்காதீர்கள், சாது மிரண்டால் காடு்கொள்ளாது. முருகன் தமிழ்கடவுள், ஆனால் அவர் எல்லா இடத்திலும் பரந்து இருக்கிறார். சிலர் இங்கு நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். நமக்கு நிறத்தில் எந்த பேதமும் இல்லை.
மாற்றம் ஒன்றே மாறாதது
கருப்பு நிறத்தை வைத்து அரசியல் செய்யும் கூட்டம் உள்ளது. முருகரின் கந்த சஷ்டி கவசத்தை கிண்டல் செய்தனர். முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தாலே போதும், கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போய்விடும். அன்பால் இணைவோம், ஆவேசத்தால் வெல்வோம். நமது நாட்டில் இந்து கடவுளை நம்ப மாட்டார்கள், இது தான் நாட்டின் பிரச்சனை. நான் இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் மதிக்கிறேன். அதே சமயம் எங்கள் நம்பிக்கையை பற்றி பேசாதீர்கள். நான் வளர்ந்த தமிழ்நாட்டில் இந்த மாநாட்டின் மூலம் என்னை இவ்வாறு கௌரவிப்பீர்கள் என நினைத்து கூட பார்க்கவில்லை.
நம் எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்றால் இந்துகள் ஒற்றுமையாக இருந்து போராடினால் வெற்றி பெறலாம். மாற்றம் ஒன்றே மாறாதது. தர்மத்தின் வழியில் நின்றால் மாற்றம் வருவது உறுதி'' என இவ்வாறு கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.