கோயம்புத்தூர்: கோவையில் அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பயிற்சிக்கு வந்தவர்களை கழிவறைக்கு பெயிண்ட் அடிக்க வைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயிற்சிக்கு வந்தவர்கள் கழிவறைக்கு பெயிண்ட் அடித்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் உக்கடம் பணிமனையில், ஐடிஐ படித்த 25க்கும் மேற்பட்டவர்கள் தொழில்நுட்ப பயிற்சிக்காக இணைந்துள்ளனர்.
இவர்களுக்கு பேருந்துகளின் பராமரிப்பு பழுது நீக்கம், உதிரி பாகங்களை மாற்றி அமைத்தல், இன்ஜினில் உள்ள பழுதுகளை நீக்குவது குறித்தும், அவற்றின் தன்மை செயல் திறன் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஆனால், இவ்வாறு பயிற்சி பெற வேண்டியவர்களுக்கு பணிமனையில் உள்ள கழிவறைகளுக்கு பெயிண்ட் அடித்தல், கழிவறை மற்றும் அதிகாரிகளின் அறைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் பயிற்சிக்கு வந்தவர்கள் கழிவறைக்கு பெயிண்ட் அடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை எடுத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் உள்ள வாட்சப் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வீடியோ காட்சிகள் மற்ற சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சிறந்த மாநகராட்சியில் தஞ்சாவூர் முதலிடம், அகில இந்திய அளவில் 14-வது இடம் பெற்று சாதனை!
உக்கடம் 1 கிளை மேலாளராக உள்ள மணிவண்னன் ஒண்டிபுதூர் கிளையில் இருந்த போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அவர் தற்போது உக்கடம் கிளைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், இங்கு பயிற்சிக்கு வந்தவர்களை பல்வேறு பணியில் ஈடுபடுத்தியும், கழிவறைக்கு பெயிண்ட் அடிக்க செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்துவதாக அங்குள்ள ஓட்டுநர்கள், நடத்துநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, '' பயிற்சிக்கு வந்தவர்கள் கழிவறைக்கு பெயிண்ட் அடித்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயிற்சிக்கு வந்தவர்களை வேறு எந்த பணிக்கும் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி இப்பணியை செய்ய அறிவுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தனர். இந்த சம்பவம் உக்கடம் பணிமனையில் பெரும் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்