தஞ்சாவூர்: அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பரிணாம வளர்ச்சி அடைந்து அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறி உள்ளதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார்.
தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 37 வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், திராவிடர் கழகத்தின் தலைவருமான கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கி.வீரமணி, "தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தியது குறித்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆளுநர் மவுனம் காத்து வருகிறார். அவரது மவுனத்தின் மூலம் தவறு செய்தததை அவர் ஏற்றுக் கொண்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் பதவியை விட்டு விலகி இருக்க வேண்டும். பேரறிவாளன் வழக்கிலேயே முடிவு எடுக்காமல் தாமதம் செய்ததாக உச்ச நீதிமன்றம் அவர் மீது விமர்சனங்களை முன் வைத்திருந்தது. எனவே, அவர் ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டியது முக்கியமாகும். மத்திய அரசு மரியாதையை காப்பாற்றி கொண்டு அரசியல் சட்டப்படி தான் ஆட்சியை வழி நடத்துகிறோம் என்று காட்ட விரும்பினால், உடனடியாக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மாநில பாஜக தலைவரானார் நயினார் நாகேந்திரன்! வெளியானது அறிவிப்பு!
நடிகர் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். பின்னர் அது ஜெயலலிதா காலத்தில் அம்மா திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்து. பின்னர் அடிமை திராவிட முன்னேற்றக் கழகமாக பரிணாம வளர்ச்சியடைந்து. இப்போது அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறி உள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி மவுனமாகவே இருக்கிறார். எந்தக் கட்டத்திலும் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொன்ன வீராதி வீரராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தெளிவான முடிவு எடுத்து லேடியா? மோடியா? என பரப்புரை மேற்கொண்டார்.
அதிமுக-பாஜகவிடம் கொள்கை ஏதும் இல்லை. எந்த கூட்டணி உருவானாலும் திமுக கூட்டணியை அசைத்துக் கூட பார்க்க முடியாது. 200 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற அக்கட்சியின் இலக்கு என்பது அதிமுகவுடன் பாஜக கூட்டணி மூலம் 200 தொகுதிகள் என்ற இலக்கை தாண்டி வெற்றி பெறும் என்பது உறுதியாகி இருக்கிறது. அதற்கான வாய்ப்பை அமித் ஷாவே அளித்திருக்கிறார். அதிமுகவின் கடைசி அத்தியாயத்தை எழுதிய வரலாற்று பெருமை எடப்பாடி பழனிசாமிக்கே சேரும்,"என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்