சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்களின் மனுவில், அக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாகும் 6 உறுப்பினர்கள் பதவிகளுக்கு வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட முடியும். அதன்படி அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரையும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக அவை தலைவர் தனபால் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோரின் வேட்புமனுக்களில் கையொப்பமிடுவதற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் வந்தனர். அங்கு அவர்கள், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இரண்டு வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்களில், கையொப்பமிட்டனர்.
இதனை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணியிலிருந்து 1.30 மணிக்குள் அதிமுக உறுப்பினர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். அன்றைய தினம் அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது அடையாள அட்டையுடன் வருமாறு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
அதிமுக சார்பில் போட்டியிடுவோரின் வேட்புமனுக்களில் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட இன்றைய நிகழ்வில், அதிமுக பொருளாரும், திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சீனிவாசன், வேப்பனஹள்ளி தொகுதி எம்எல்ஏவும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.