ஆரணி: அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் இல்லத்தில் கடந்த 14 மணி நேரமாக நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவடைந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன். இவர் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இந்த நிலையில், ஆரணியில் உள்ள சேவூர் ராமச்சந்திரன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதலே திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மற்றும் வேலூர் சரக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 20-க்கு மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், ஆரணியில் உள்ள சேவூர் ராமச்சந்திரனின் மகன்கள் விஜயகுமார் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கும் அதிகமாக 200 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினார்கள்.

காலை 6 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த சோதனை 14 மணி நேரம் நள்ளிரவு வரை நடைபெற்றது. சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேவூர் ராமச்சந்திரன், "தமிழக அரசு டாஸ்மாக் முறைகேடுகளை மடைமாற்ற அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இது பழிவாங்கும் நடவடிக்கை. எந்த முறைகேட்டிலும் நாங்கள் ஈடுபடவில்லை. சொத்து ஆவணங்களை சிலற்றை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கை சந்திப்போம். சோதனைக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட இபிஎஸ்க்கு நன்றி" என்றும் அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.