விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பேரங்கியூர் கிராமத்தில் நடைபெற்ற புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் நடிகரும், முன்னாள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்குமார் இன்று காலை பங்கேற்றார். அவரது நெருங்கிய நண்பர் செந்தில் முருகன் இல்ல புதுமனை புகுவிழா விழாவில் கலந்து கொண்ட சரத்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அரசியல் மற்றும் சமகால விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
"திமுக ஆட்சியின் நான்கு ஆண்டுகால செயல்பாடு மத்திய அரசை குற்றம் சாட்டுவதிலேயே மையம் கொண்டுள்ளது. 'நிதி வரவில்லை' என கூறுவதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். மத்திய அரசுடன் சுமூகமான உறவைத் தொடர்ந்திருந்தால் தமிழகம் மேலும் வளர்ந்திருக்கும்" என்றார். சட்டம் ஒழுங்கு சீர்கேடாகியுள்ளது என குறிப்பிட்ட அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக பல கொலைகள் நிகழ்ந்துள்ளன. இந்த தொடர்கொலைகளை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அடுத்த கட்ட கூட்டணி குறித்து, “கூட்டணி தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை சென்னையில் கூட்டம் நடத்தி முடிவெடுப்பார்” என தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, “234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றிபெறும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட கருத்து குறித்து, “அவரது கருத்து எதற்காக வந்தது என புரியவில்லை. தமிழ் ஒரு பழமையான மொழி, ஆனால் அதுபோன்ற மதிப்பு கூறவேண்டியது ஆராய்ச்சியாளர்களின் பணி. தமிழ் பற்றி பேசும் திமுகவினர் ஏன் இதற்கான பதில் சொல்லவில்லை?” என்றார்.
இதையும் படிங்க: அமித் ஷா தமிழ்நாடு வருகை... நாம் தமிழர் சீமான் போடும் கணக்கு!
பாமகவில் உள்ள விவகாரம் குறித்து, “அப்பா, மகன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். அவர்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொண்டால், அது அந்த இயக்கத்திற்கு நல்லது” என்றார்.
முடிவில், இடஒதுக்கீடு குறித்து அவர், “69% இடஒதுக்கீடு தமிழகத்தில் மட்டுமே உள்ளது. இதுபோன்று பெரிய சட்டத்தை மத்திய அரசு உருவாக்கி அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும்” எனக் கூறினார். மேலும், இந்நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.