ETV Bharat / state

பெண் பயணியை பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர் - பாய்ந்தது நடவடிக்கை

திருச்செந்தூரில் பெண் பயணியை ஏற்ற மறுத்து, அவதூறாக பேசிய நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து
தனியார் பேருந்து (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 13, 2025 at 11:54 AM IST

1 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: திருச்செந்தூரில் தனியார் பேருந்தில் பெண் பயணியை ஏற்ற மறுத்து நடத்துநர், அவரை அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி வைரலான நிலையில், தற்போது நடத்துநர் மீது போக்குவரத்துத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல், பேருந்து உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் - தூத்துக்குடி இடையே நாள்தோறும் நூறுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தூத்தூக்குடிக்கு செல்லும் தனியார் பேருந்துகள், வருமானத்திற்காக, இடைநிறுத்த ஊர்களில் உள்ள பயணிகளை ஏற்றாமல், நேராக தூத்துக்குடி செல்லும் பயணிகளை மட்டுமே ஏற்றுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் வருகின்றன. மேலும், ஒரு சில பேருந்துகள் மட்டுமே காயல்பட்டிணம் வழியாக செல்வதால், அப்பேருந்துகளில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகளவில் காணப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (செப்.12) திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் விஎஸ்எஸ் என்ற தனியார் பேருந்தில் ஏற முயன்றார். அப்போது பேருந்தின் நடத்துநர், அப்பெண்ணை தடுத்து நிறுத்தி, "பேருந்து எடுக்கும் நேரத்தில் நீங்கள் ஏறினால் போதும்" என்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், "நாங்களும் டிக்கெட் எடுத்துதானே பயணம் செய்கிறோம், எங்களை ஏன் ஏற்ற மறுக்கிறீர்கள்?" என கேள்வியெழுப்பினார்.

பெண் பயணியிடம் வாக்குவாதம் செய்த நடத்துநர்
பெண் பயணியிடம் வாக்குவாதம் செய்த நடத்துநர் (ETV Bharat Tamil Nadu)

இதற்கு நடத்துநர், "அப்படி நீங்கள் டிக்கெட் எடுத்து எங்கள் பஸ்ஸில் ஏற வேண்டாம். பேருந்தில் உள்ளவர்கள் அனைவரும் தூத்துக்குடி செல்பவர்கள். நீங்கள் பேருந்து செல்லும் நேரத்தில் ஏறினால் போதும்" என வாக்குவாதம் செய்தார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி, நடத்துநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் சோகம்: கிரேன் மோதி தவெக தொண்டர் உட்பட 2 பேர் பலி - 4 பேர் படுகாயம்

நடத்துநர் மீது நடவடிக்கை

இந்நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து இன்று (செப்.13) திருச்செந்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து செக்கிங் இன்ஸ்பெக்டர் செண்பகவள்ளி, பேருந்தை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து, பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட நடத்துநர் வீரபத்திரன்இன்று பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

பெண்ணை பேருந்தில் ஏற்ற மறுத்து வாக்குவாதம் செய்த நடத்துநர் (ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து, ஓட்டுநரும், நடத்துனரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு நேற்று நடந்த சம்பவம் குறித்து அவர்ரளிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட நடத்துநர் வீரபத்திரனின் லைசன்ஸை ரத்து செய்த போக்குவரத்து துறை, பேருந்தின் உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது.