தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 23.12.2018 அன்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் காயங்களுடன் கிடப்பதாக சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் காட்டுப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு உடலை கைப்பற்றி கொலை வழக்குப்பதிவு செய்து இறந்த நபரின் உடலில் உள்ள அடையாளங்கள், விரல் ரேகைகள் மற்றும் பிற அடையாளங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இறந்த நபர் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பது தெரிய வந்தது.
பின்னர் இவ்வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையில் உறுதியான ஆதாரங்கள் கிடைக்காமல், கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு விசாரணைகள் நடந்தும் கடந்த 7 ஆண்டுகளாக தீர்வின்றி இருந்து வந்தது. இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கடந்த 2025 பிப்ரவரி மாதம் மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதனையடுத்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட முந்தைய சாட்சிகள், டிஜிட்டல் ஆதாரங்கள், சந்தேகப்படும் நபர்களின் உடலில் உள்ள காயங்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கூறிய தகவல்கள் ஆகியவற்றை மீண்டும் ஆராயப்பட்டது. மேலும் கொலைக்குப் பிறகு கிராமத்தை விட்டு சென்றவர்கள் யார் யார்? என தனித்தனியாக கண்டறியப்பட்டனர்.
இதையும் படிங்க: சேலத்தில் பட்டப்பகலில் கணவன், மனைவி வெட்டிப் படுகொலை! மர்ம நபர்கள் வெறிச்செயல்!
இதனையடுத்து மேற்படி போலீசாரின் தீவிர விசாரணையில் புதிய ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில் விளாத்திகுளம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான கோடாங்கி (64), கருப்பசாமி (40), ராஜராஜன் (36) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (55) ஆகியோர் என்பதும் அவர்களை இன்று கைது செய்து விசாரணை நடத்தியதில் 7 ஆண்டுகளுக்கு முன் மதுபானம் அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பொன்னுசாமியை கொலை செய்ததும் ஒப்புக்கொண்டனர்.

மேலும், கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்நுட்ப ரீதியாகவும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெகுவாக பாராட்டினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.