சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 10 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, அந்த கூட்டட்தில் மீனவர்கள் பிரச்னை, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது, இருமொழிக் கொள்கையில் உறுதி, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "இதுவரை தளபதி என அழைக்கப்பட்ட விஜய்யை, இன்று முதல் வெற்றி தலைவர் என அழைப்போம். இது இக்கூட்டத்தில் இன்னொரு தீர்மானமாக நான் தெரிவிக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 1977-ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனது போல, 2026-ல் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராவார்.” என்று பேசினார்.
மேலும், “எதிர்க்கட்சியில் இருக்கக் கூடியவர்களை எப்படி எல்லாம் விலை கொடுத்து வாங்க வேண்டும், அந்தக் கட்சியை எப்படி எல்லாம் உடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பாவம் மேடையில் நமக்காக சாட்டை அடித்துக் கொண்டு நமக்காக ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். நமக்காக வேலை செய்து கொண்டு இருக்கிறார் என்ற மோடி நினைக்கிறார். அண்ணாமலை பாஜகவிற்காக வேலை செய்வதாக மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அண்ணாமலையை தி.மு.க-வின் வியூக வகுப்பாளர்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு லட்சத்து 75 ஆயிரம் (2,75,000) பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் விஜய். 70,000 பூத் கமிட்டியில் 50,000 பூத் கமிட்டியில் சரிபார்ப்பு முடிந்துள்ளது. உட்கட்டமைப்போடு தேர்தல் பணிக்கு தயாராகி வருகிறோம்.
உங்களின் அரசியலுக்கு ஓய்வளிக்க நாங்கள் வந்து கொண்டு இருக்கிறோம். 70 வருடம் கட்சி நடத்துபவர்கள், 3 அக்ரீமென்ட் போட்டுவிட்டு கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் எங்க கட்சியை நீங்கள் தொட்டால், உங்க கட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்.
உலகம் முழுவதும் ஐடி குழுவை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உருவாக்கி இருக்கிறார். அண்ணாமலை அவர்களே உங்களுடைய பிரதமர் மோடி அவர்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள். தமிழக வெற்றி கழகத்தில் சாதி பிரச்சினை கிடையாது. ஜாதியை உருவாக்கியது திமுக. நான் அங்கிருந்து வேலைபார்த்து விட்டுதான், இங்கே வந்திருக்கிறேன்.
அண்ணா, பெரியார் கொள்கைகளை நிறைவேற்றக் கூடிய கட்சி தவெக. எம்ஜிஆர் அவர்களும் தி.மு.க-வின் உண்மை முகம் தெரிந்ததனால் தான் வெளியே வந்தார். அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் சிலை வைக்காத நீங்கள் சமூக நீதியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
இதையும் படிங்க |
இன்றைக்கும் அண்ணா அறிவலாயத்தில் பெரியார் படமும் அம்பேத்கர் சிலையும் இல்லை. நீங்களெல்லாம் சமூக நீதி பேசலாமா? தலித் மக்களை ஏன் தலித்தாக பார்க்க வேண்டும்; மனிதனாக பார்க்க வேண்டும்.
காவல்துறையை இயக்கக் கூடிய அதிகாரம்தான் தவறு செய்கிறது. ஒரு தவறு நடந்தால் காவல்துறையினர் எடுக்கும் முடிவுகள் அரசியல் ரீதியாக உள்ளது. காவல்துறையை இயக்கக்கூடிய அதிகாரம் தான் இங்கு தவறு செய்கிறது. திமுகவை பாயாசம் என செல்லக் கூடாது; நாசிசம் என்றுதான் சொல்ல வேண்டும்.” என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.