கரூர்: ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, தவறி விழுந்து பெண் தனது இரண்டு கால்களையும் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் வடக்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நீலா (27). இவர்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமான நிலையில், ஒரு குழந்தை உள்ளதாகவும், கணவர் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில், இவர்களது விவாகரத்து வழக்கு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் நீலா, காரைக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வார விடுமுறைக்காக வாழப்பாடி வந்த நீலா, காரைக்குடி செல்வதற்காக நேற்று (ஜூன் 8) சேலத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயிலில் திருச்சி வரை பயணித்துள்ளார்.
இந்த நிலையில், ரயில் மாலை 4.30 மணியளவில் குளித்தலை ரயில் நிலையம் வந்தடைந்துள்ளது. அப்போது, குடிநீர் பிடிப்பதற்காக இறங்கிய நீலா, நடைமேடையில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ரயில் திடீரென கிளம்பியதால் பதற்றமடைந்த நீலா, ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்துள்ளார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக ரயிலின் படியில் இருந்து தவறி விழுந்த நீலாவின் கால்கள் நடைமேடையில் சிக்கியுள்ளது. அதில், அவரது வலது காலின் கணுக்கால் துண்டான நிலையில், இடது காலில் எழும்பு முறிந்துள்ளது. அதனால், வலி தாங்கமுடியாமல் கதறி துடித்த பெண்ணை கண்ட பயணிகள், விரைந்து சென்று மீட்டுள்ளனர். மேலும், அங்கு பணியில் இருந்த ரயில்வே நிலைய அதிகாரிகள், படுகாயமடைந்த நீலாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று (ஜூன் 9) அதிகாலையில் நீலாவிற்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மேலும், அவரது இரண்டு கால்களும் நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குளித்தலை ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் முன்பு, ரயில்வே நிலைய பணியாளர்கள் முறையாக முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பாததே இந்த விபத்துக்கான காரணம் என ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதனால், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கரூர் இரும்பு பாதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.