ETV Bharat / state

போலீசார் தாக்குவதாக வெளியான வீடியோ விவகாரத்தில் திருப்பம் - இளைஞர்கள் கடத்த முயன்றதாக காவலர் வெளியிட்ட வீடியோ!

காரில் வந்த இளைஞரை போலீசார் கடுமையாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கோவை மாநகர உக்கடம் காவல் நிலைய தலைமை காவலர் முகத்தை மறைத்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்

முகத்தை மறைத்து வீடியோ வெளியிட்ட காவலர்
முகத்தை மறைத்து வீடியோ வெளியிட்ட காவலர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 11, 2025 at 11:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: காரில் வந்த இளைஞரை போலீசார் கடுமையாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கோவை மாநகர உக்கடம் காவல் நிலைய தலைமை காவலர் முகத்தை மறைத்து வெளியிட்ட வீடியோவில் இளைஞர்கள் தம்மை கடத்த முயன்றதாக அதர்ச்சி புகார் கூறியுள்ளார்.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஜூன் 24ஆம் தேதி இரவு கார் ஒன்றை மறித்து போலீசார் சோதனையிட முன்றனர். ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது. எனினும், அந்த காரை விரட்டி சென்று பிடித்த போலீசார், அந்த இளைஞரை தாக்குவதாக வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

சொகுசு காரில் வந்த இளைஞரை ஐந்து போலீசார் அடுத்தடுத்து கடுமையாக கைகளாலும், லத்தியாலும் தாக்குதல் நடத்துவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. கோவை மாநகர காவல்துறையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வதாக விமர்சனங்கள் எழுந்தன. இளைஞரை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் இரண்டு புதிய வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் பேசும் வீடியோவில், "எனது பெயர் அபுதாகிர், நான் கடந்த 24ஆம் தேதி கோட்டைமேடு வழியாக காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது போலீசார் என் வாகனத்தை சோதனை செய்தனர். போலீஸ்காரர் ஒருவர் வாகனத்தில் ஏறியவுடன், பதட்டத்தில் வண்டியை எடுத்து விட்டேன். அப்போது போலீஸகாரரின் பெல்ட் எனது வாகனத்தில் மாட்டிக் கொண்டது. இந்த காட்சிகளை அருகில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து யாரோ வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். எனக்கும் காவல்துறையினருக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நாங்கள் சமரசமாகிவிட்டோம்,"என கூறியுள்ளார்.

காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் பேசும் காவலர், "எனது பெயர் ஆனந்த கிருஷ்ணன், உக்கடம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகின்றேன். வின்சென்ட் சாலையில் கடந்த 24ஆம் தேதி உதவி ஆய்வாளருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தேன். அப்போது அந்த வழியாக BMW காரில் வந்தவர்களை நிறுத்தி போதையில் இருக்கிறார்களா? என சோதனை செய்தோம். அப்போது காரில் இருந்த இளைஞர்கள் என்னை இழுத்து வாகனத்தில் போட்டு கொண்டு, செல்ல முயன்றனர். எனவே, அதிர்ச்சியில் நான் சக காவலர்களை உதவி செய்யுமாறு கத்தினேன். உடன் இருந்த காவலர்கள் காரை நிறுத்தி என்னை மீட்டனர்.

இதையும் படிங்க: கோவை குண்டு வெடிப்பு; மூன்று தீவிரவாதிகள் சிக்கியது எப்படி? டிஜிபி விளக்கம்!

எனவே, காரில் இருந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தோம். அவர் பெயர் அபுதாகிர் என்பது தெரிய வந்தது. போதையில் இருக்கிறாரா என பரிசோதனை செய்த போது அந்த கருவியில் அவர் குடிபோதையில் இருக்கிறார் என காட்டியது. எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நாள் அபராதம் கட்டிவிட்டு காரை மீட்டு சென்றார்,"என கூறியுள்ளார்.

காவல்துறையினர் இளைஞரை கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வரும் நிலையில், போலீசார் தன்னை தாக்கியது குறித்து இளைஞர் அபுதாகீர் எந்த தகவலையும் வீடியோவில் சொல்லவில்லை.
அதேபோல இளைஞரை உதவி ஆய்வாளர் உட்பட போலீசார் கடுமையாக தாக்கியது குறித்தும் காவலர் ஆனந்த கிருஷ்ணனும் வீடியோவில் எதுவும் சொல்லவில்லை. இளைஞர் மீது கடுமையாக தாக்குதல் நடத்திய போலீசார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. மேலும் தம்மை இளைஞர் கடத்த முயன்றதாக காவலர் சொல்கிறார். அப்படி எனில் ஏன் அந்த இளைஞர் மீது ஏன் கடத்தல் வழக்கு பதிவுசெய்யவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.