சென்னை: தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரையில் நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக அரசியல் கருத்துக்களையும், டாஸ்மாக் மீது ஊழல் குற்றச்சாட்டையும் வைத்ததற்கு எதிர்வினையாற்றினார்.
அது குறித்து ஆ. ராசா பேசுகையில், ''நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவருடைய தகுதியினை மறந்து அப்பட்டமான பொய்களை பேசியுள்ளார். அவர் பேச்சை எங்களால் ஒவ்வொரு வரியாக ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். அமித்ஷாவின் பேச்சையும், போக்கையும் தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
'கேலிக்கூத்தான அரசியல்'
தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசின் நிதி பல நேரங்களில் கிடைக்காவிட்டாலும் அந்த நிதியினை மாநில நிதியிலிருந்து வழங்கி வளர்ச்சி திட்ட பணிகளை மிக விரைவாகவும் நல்ல வழியிலும் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதனை ஜீரனிக்க முடியாத மத்திய அரசும், பாரதிய ஜனதா கட்சியும் அமித் ஷாவை இங்கு வர வழைத்து கேலிக்கூத்தான அரசியல் நாகரிகத்திற்கு புறம்பான காரியத்தை அரங்கேற்றியுள்ளனர். அமித் ஷா என்ற தனிநபர் மட்டுமல்லாமல் அவர் வைத்துள்ள பதவிக்கும் இது அழகல்ல. இத்தகைய அருவருப்பான போக்குகளை அவர் நிறுத்திக் கொள்வது நல்லது.
'சிரிப்பாக உள்ளது'
அமித் ஷாவை பார்த்து திமுகவினருக்கு ஏன் ஷாக் அடிக்க வேண்டும்? எங்களை பார்த்து ஷாக் அடித்த காரணத்தினால் தான் அமித் ஷாவை இங்கு வரவழைத்துள்ளனர். பாஜகவின் எந்தவிதமான மத அரசிலும் தமிழகத்தில் எடுபடவில்லை, அவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பாக உள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் அடிக்கடி ஒரு மாநிலத்தின் மாநகராட்சிகளுக்கும், முனிசிபாலிட்டிகளுக்கும் செல்ல வேண்டிய காரணம் என்ன? அவர் தமிழகத்தை கண்டு பயந்த காரணத்தினால் தான் அடிக்கடி இங்கு வந்தார்'' என கூறினார்.
'ஓய்வூதியம் திட்டம் மட்டுமே பாக்கி'
மேலும், தேர்தல் வாக்குறுதியில் திமுக 10% தான் நிறைவேற்றி உள்ளது என்ற அமித் ஷாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஆ.ராசா, ''நாங்கள் 98.5 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் திட்டம் மட்டுமே பாக்கி உள்ளது. அதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, நாங்கள் கூறாததையும் இதுவரை செய்துள்ளோம். அமித் ஷாவை அழைத்து நாங்கள் செய்த அனைத்து திட்டங்களையும் ஆதாரத்துடன் காமிக்கிறோம். ஆனால் இந்தியில் மட்டும் பேசக்கூடாது'' என்றார்.
தொடர்ந்து, மத்திய அரசின் திட்டங்களை மடைமாற்றி மாநில அரசு பயன்படுத்திக் கொள்வதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, '' பாஜக எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் குற்றச்சாட்டுகள் வைத்து வருகின்றனர். அவர்களுடைய அரசியல் தத்துவம் அனைத்து இடங்களிலும் படையெடுத்து ஜெயிக்கிறது, ஏன் இங்கு ஜெயிக்கவில்லை என்று கேட்டால் அவர்களுடைய சித்தாந்தத்திற்கு மாற்று சித்தாந்தம் எங்களிடம் உள்ளது அதனால் தான் இங்கு அவர்களால் ஜெயிக்க முடியாது.
தொகுதி மறு சீரமைப்பு
தொகுதி மறு சீரமைப்பு அமைப்பதின் முக்கிய காரணம் என்னவென்றால் தென் மாநிலங்கள் இல்லாமல் எந்த விதமான மசோதாக்களையும் அவர்களால் இயற்ற முடியும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சூதினை முறியடித்தவர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ற மாமனிதர் ஒருவர் மட்டுமே, அதனை டெல்லி வரை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
முருகர் பக்தர்கள் மாநாடு
22-ம் தேதி பாஜக சார்பில் நடத்தப்படும் முருகர் மாநாடு முற்றிலும் அரசியல் நோக்கத்தினை கையாள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு நடத்தும் முருகர் மாநாட்டுக்கு காரணம், முஸ்லிம் மக்களுக்கு எதிராக கருத்துகள் திணிக்க வேண்டும் என்பதற்கு மட்டுமே.
ஏன் கீழடி ஆய்வு மறுக்கப்படுகிறது?
தமிழுக்கு ஏதும் செய்யவில்லை என திமுகவினர் மீது குற்றச்சாட்டுகள் அமித் ஷா குற்றசாட்டு வைக்கிறார். ஏன் கீழடி ஆய்வு மீண்டும் மீண்டும் மறுக்கப்படுகிறது? கீழடி ஆய்வு இந்தியாவின் தொல்லியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் தமிழகத்தில் இரும்பு ஐந்தாயிரத்தி ஐநூறு வருடங்களுக்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டது என ஏன் அங்கீகரிக்கவில்லை? எத்தனை முறை மோடி வந்தாரோ அத்தனை முறை வாக்கு வித்தியாசம் அதிகமாக எங்களிடம் வந்தது. அமித் ஷா மீண்டும் இங்கு வர வேண்டும், அவர் வந்தால் எங்களுடைய இலக்கான 200 தொகுதிகளை தாண்டி அதற்கும் மேல் வெற்றி பெறுவோம்'' என ஆ. ராசா கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.