சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது திரைப்பட இசை, பாடல் ஆல்பங்கள் போன்றவற்றால் ‘தமிழ்’ மொழியை உலகறியச் செய்யும் சீரிய பணியினை மேற்கொண்டு வருகிறார். தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் (ஏப்ரல் 14) இன்று, தமிழ் மொழிக்கான ஒரு டிஜிட்டல் பெருமைச்சின்னத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
‘தமிழ்’ பெருமைச்சின்னம் டிஜிட்டல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது கட்டடமாகவும் வரக்கூடும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். ‘ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே’ போன்ற திரைப்பட பாடல்கள், செம்மொழி மாநாட்டிற்காக ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ போன்ற ஆல்பம் பாடல்கள், இவரின் நேர்த்தியான இசை வடிவத்தால் பாரெங்கும் உள்ள தமிழ் மக்களால் மகிழ்வோடு ஒலிக்கப்பட்ட பாடல் கோப்புகளாகும்.
உலகளவில் தமிழ் மொழியை எடுத்துரைக்கும் அளவிற்கு இவரது இசையமைப்புகள் இருந்து வருகின்றன. தற்போது தான் வெளியிட்டுள்ள டிஜிட்டல் நினைவுச்சின்னம் படத்துடன், சில கருத்தையும் ரகுமான் பதிவிட்டுள்ளார். அதில், ‘தமிழ்’ உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும் என்றும் குறிப்பாக தமிழ்ச் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே முற்கால தமிழ்ச் சங்கங்களின் அர்ப்பணிப்பு நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது,” என்று அதில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க |
ஏ.ஆர்.ஆர் (ARR) இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் நினைவுச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான், எதிர்காலத்தில் இந்நினைவுச்சின்னத்திற்கென ஒரு கட்டடமும் வரக்கூடும் எனத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

"இதுகுறித்து மேலும் தகவல்களை வெளியிடவிருக்கிறோம். இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்” எனத் தமிழின் தொன்மையையும், அதன் சிறப்பையும் தன் படைப்புகள் வாயிலாக தொடர்ந்து வலியுறுத்தபோவதை தனது இன்ஸ்டா ‘தமிழ்’ பெருமைச்சின்னம் பதிவின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளிப்படுத்தியுள்ளார்.
இசை சார்ந்து உலகமெங்கும் சுற்றித்திரியும் ஏ.ஆர்.ரகுமான், தான் செல்லும் இடங்களில் எல்லாம், தமிழ் மொழியில் ஒரு வார்த்தையாவது பேசிவிட்டு தான் திரும்புவது வழக்கம். பெரிய விருது வழங்கும் நிகழ்வாக இருந்தாலும், சிறப்பு அழைப்பாளராக செல்லும் நிகழ்வாக இருந்தாலும் சரி, ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று ஒரு வார்த்தையாவது தமிழில் சொல்லிவிட்டு தான் மேடையில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் கீழிறங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.