-BY எஸ்.சுரேஷ் பாபு
திருவள்ளூர்: 'எந்த வியர்வைக்கும் வெற்றி வேர் வைக்குமே'... என்ற பாடல் வரி எதற்கு பொருத்தமோ இல்லையோ விவசாயத்துக்கு ஆக சிறந்த உதாரணம். விவசாயத்துக்கு பொறுமை மிக மிக அவசியமான ஒன்று. அந்த வகையில் சுமார் 20 ஆண்டுகளாக லாபம் ஈட்டாமல் இருந்தும் கூட தொடர் முயற்சியால் தற்போது வருடத்திற்கு ரூ.60 லட்சம் வரை வருமானத்தை ஈட்டி வருகிறார் பாலைவன ரோஜா செடி விற்பனையாளர் ஜலந்தர். ஆச்சரியமாக உள்ளதல்லவா? அதுவும் சென்னையை அடுத்த திருவள்ளூரில் இப்படியொரு செடி உற்பத்தியில் சாதித்து காட்டியிருக்கிறார் ஜலந்தர்.
பாலைவன ரோஜா என்றால் என்ன?
பாலைவன ரோஜா என்பது மெதுவாக வளரும் ஒரு தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் அடீனியம் ஒபெசம். இது ஆண்டுக்கு சுமார் 12 அங்குலம் மட்டுமே வளரும். பாலைவன ரோஜா பெரும்பாலும் அதன் அடர்த்தியான சதைப் பற்றுள்ள தண்டு, மெல்லிய மற்றும் மென்மையான இலைகள் மற்றும் அடர் இளஞ்சிவப்பு ஊதுகுழல் பூக்கள் காரணமாக போன்சாய் செடியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்டது.
ஆனால், இந்த பாலைவன ரோஜாவை திருவள்ளூர் அருகே விளைவித்து சாதனை படைத்துள்ளார் ஜலந்தர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட ஈசனம் குப்பம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஜலந்தர் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 40 ஆண்டு காலமாக அடீனியம் ஒபெசம் என்ற பாலைவன ரோஜா அழகு செடியை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இதை கேள்விப்பட்டதும் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு குழு ஈசனம் குப்பத்தை நோக்கி ஆர்வத்துடன் புறப்பட்டது.

ஜலந்தர் பராமரித்து வரும் அந்த அழகிய பாலைவன ரோஜா தோட்டத்தை நெருங்கினோம். கொளுத்தும் கோடை வெயிலிலும் கம்பீரமாக காட்சி தந்த பாலைவன ரோஜாக்கள் எங்களது வருகைக்காக காத்திருந்ததை போலவே இருந்தது. பெரிய பெரிய தண்டுகளுடன் வீட்டு பெரியாட்களை போல சில செடிகளும், சிறு பிள்ளைகளை போல வரிசை கட்டி நூற்றுக்கணக்கான பாலைவன ரோஜா செடிகளை பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
தோட்டத்தில் நமக்காக காத்திருந்த ஜலந்தரிடம் ஆவலுடன் பேச தொடங்கினோம்..1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பூந்தோட்டத்தில் முழுவதுமாக பாலைவன ரோஜா செடிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றவர், மொத்தம் 450 வகையான செடிகளில் ஒவ்வொரு செடியிலும் மூன்று வகையான பூக்கள் பூக்கும் என்றார்.

தொடர்ந்து பேசியவர், சிறிய வேர்கள் கொண்ட செடிகள் ரூ.150 முதல் தொடங்கி தடினமான வேர்கள் கொண்ட செடி ரூ.12 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாலைவன ரோஜா செடிகள் உலகளவில் சென்னை, வியட்நாம், தாய்லாந்து ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே கிடைக்கும். அதிலும், அதிக உயரத்துடன் வேர்கள் தடித்து ரூ.12 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் செடிகள் இங்கு மட்டுமே இருக்கின்றன.
இந்தச் செடிகளை பராமரிக்க வாரத்துக்கு இரண்டு முறை தண்ணீர் ஊற்றினாலே போதும். உரம் தேவை இல்லை. முழுவதுமாக வெயிலில் வைத்தாலே போதும் என்ற ஜலந்தர் பனி பிரதேசத்தை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் இந்த செடி வளரக்கூடியவை என தெரிவித்தார்.
மேலும், வருடங்கள் அதிகமாக அதிகமாக இந்த செடியின் விலை அதிகமாகுமாம். 20 வருடங்கள் எந்த ஒரு லாபமும் இல்லாமல் இதனை செய்து வந்த ஜலந்தர் 20 வருடங்கள் கழித்து தான் லாபம் ஈட்ட தொடங்கியுள்ளார். மேலும், நீண்ட காலத்துக்கு பின்னரே லாபம் ஈட்ட முடியும் என்கிறார் ஜலந்தர்.

தொடர்ந்து பேசிய அவர், செடிகளை ஒட்டுப்போட்டு வளர்ப்பதினால் பல வண்ண பூக்கள் ஒரே செடியில் பூக்கின்றன. அதன்விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். நான் தயார் செய்யும் செடிகள் கேரளா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் அதிகப்படியாக விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக வெளிநாடுகளில் துபாய் போன்ற அரபு நாடுகளுக்கு செடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் என்னுடைய தோட்டத்தில் உள்ள செடிகளை பார்வையிட்டு வியந்து போனார். ஒரு வருடத்திற்கு ரூ.50 முதல் ரூ.60 லட்சம் ரூபாய் வரை நான் லாபம் அடைகிறேன்.
எங்கள் தோட்டத்தில் பணி செய்யும் பணியாளர்கள் இந்த செடிகளை நல்ல முறையில் வளர்த்து எங்களுக்கு மிகவும் உதவுகிறார்கள். என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்னுடைய பணியாளர்கள் தான். இந்த பாலைவன ரோஜா செடிகளை வேர்கள் பிடுங்கி வெயிலில் வைத்து விட்டால் போதும். 3 அல்லது 6 மாதம் கழித்தும் அதே செடியை எடுத்து மண்ணில் புதைத்து நீர் ஊற்றினால் இரண்டு மாதத்தில் அது துளிர்க்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இவைகள் கூடிய விரைவில் பட்டு போகாத செடிகள் என்றும் அதிகப்படியான தண்ணீர் தேவைப்படாத அழகான செடிகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு தோட்டக்கலை துறை சார்பாக தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் எனக்கு 3,000 சதுர மீட்டர் பரப்பளவில் நிழல் வலைக்குடில் ரூ.10.65 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டது. அதனால் எனக்கு செடிகளை வளர்க்க பெரும் உதவியாக இருந்தது. விரைவில் இந்த 15 ஏக்கர் பாலைவன ரோஜா தோட்டத்தை பார்வையிட பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது'' என்றும் ஜலந்தர் தெரிவித்தார்.
ஆன்லைன் விற்பனை நிறுத்தம்:
அடினியம் செடி எங்கு பெறப்பட்டது? எப்படி பராமரிக்கப்பட்டது? எப்படி விற்பனை செய்யப்பட்டது? என்பது குறித்து ஜலந்த ரெட்டி விளக்கியுள்ளார். அதாவது அவர் நம்மிடத்தில் கூறுகையில், "1986 ஆம் ஆண்டு பம்பாயிலிருந்து அடினியம் சேகரிக்கத் தொடங்கினேன். பின்னர் வளரும் நுட்பங்கள், ஒட்டுதல், கலப்பினமாக்கல் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள தாய்லாந்து, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பல முறை சென்று இருக்கிறேன். 2015 ஆம் ஆண்டு துபாய்க்கு 1 லட்சம் அடினியம் ஏற்றுமதி செய்துள்ளேன்,” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “2009 ஆம் ஆண்டு ஜமைக்காவிற்கு 5,000 அடினியம் ஏற்றுமதி செய்திருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் பல நாடுகளுக்கு 100 அடினியம் போன்ற சிறிய அளவு பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. மார்ச் 2025-ல் மொரிஷியஸுக்கு 200 அடினியம் அனுப்பி இருக்கிறேன். 2006 முதல் 2021 வரை இந்தியா முழுவதும் இந்திய தபால் மூலம் அடினியம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், இப்போது நாங்கள் ஆன்லைன் விற்பனையை நிறுத்திவிட்டோம். பல போலி விற்பனையாளர்கள் காரணமாக, தொடர்ந்து ஆன்லைன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து, எங்களிடம் செடிகளை வாங்கி செல்கின்றனர் என்று தெரிவித்தார்.