ETV Bharat / state

தமிழ் முறைப்படி நடந்த காதல் திருமணம்! நெல்லை இளைஞரை மணந்த வியட்நாம் மணமகள்!

திருநெல்வேலியை சேர்ந்த இளைஞர் வியட்நாம் பெண்ணை காதலித்து மணந்தார். நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்த காதல் திருமணத்தில் முடிவுற்றது.

திருநெல்வேலியை சேர்ந்த இளைஞர் வியட்நாம் இளம் பெண்ணை மணந்தார்
திருநெல்வேலியை சேர்ந்த இளைஞர் வியட்நாம் இளம் பெண்ணை மணந்தார் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 10, 2025 at 4:46 PM IST

2 Min Read
Choose ETV Bharat

திருநெல்வேலி: வியட்நாமில் பணியாற்றி வரும் நெல்லையை சேர்ந்த மகேஷ், அந்நாட்டின் பெண்ணை காதலித்து இருவரின் பெற்றோர் சம்மதத்துடன், தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன்-வாசுகி தம்பதியின் மகன் மகேஷ். இவர் பிபிஏ முடித்து விட்டு வியட்நாம் நாட்டில் உள்ள டிபி வேர்ல்ட் எனும் நிறுவனத்தில் குளோபல் மேனேஜராக பணி செய்து வருகிறார். இவர் பணி செய்யும் அதே நிறுவனத்தில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நுகின் லீ தய் (NGUYEN LE THUY) என்ற பெண் மனிதவளப் பிரிவு மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வரும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நட்பாக பழகத் தொடங்கினர். பின்னர், நாளடைவில் தங்களுக்கிடையேயான காதலைப் பகிர்ந்து கொண்டனர். நான்கு ஆண்டுகள் பரஸ்பரஸ் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். தங்களுடைய காதல் குறித்து இருவரும் தங்கள் பெற்றோரிடம் கூறினர். அவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் முதலில் வியட்நாம் பாரம்பரிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையும் படிங்க: "கிரிண்டர் செயலியை தடை செய்க" - தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் கடிதம்!

இதனைத் தொடர்ந்து மகேஷ், தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தமது மனைவியிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார். இதையடுத்து இருவரும் அண்மையில் வியட்நாமில் இருந்து திருநெல்வேலி வந்தனர். நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று திருமண நிகழ்வு நடைபெற்றது.

முதலில் தமிழ் முறைப்படி, மணமகன் வேட்டி சட்டை அணிந்து, மணமகள் பட்டுப்புடவை கட்டி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மகேஷின் குலதெய்வமான பெரிய நாயகி அம்மன் கோயில் முன்பு, தமது மனைவி நுகின் லீ தய்க்கு மகேஷ் திருமாங்கல்யம் அணிவித்தார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக நுகின் லீ தய்யின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருநெல்வேலி வந்தனர். இருவரது பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

திருமண நிகழ்வுகளை வீடியோ கால் மூலம் வியட்நாமில் உள்ள நுகின் லீ தய்யின் உறவினர்களும் கண்டு மகிழ்ந்தனர். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் நாடுகள் கடந்தும், சாதி, மதம் கடந்தும் காதல், திருமண உறவுகள் மலர்கின்றன. காதலுக்கு எல்லைகள் இல்லை என்பதையே இதுபோன்ற திருமணங்கள் நிரூபிக்கின்றன.

இதுகுறித்து மகேஷிடம் நாம் சில கேள்விகளை முன் வைத்தோம். வியட்நாமில் காதலித்து சொந்த ஊரில் வந்து திருமணம் செய்திருக்கிறீர்கள். இந்தியாவில் திருமணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உங்களுடையதா அல்லது உங்கள் மனைவியின் விருப்பமா? என்று கேட்டதற்கு, "இருவருக்கும் தான். ஆனால் என்னை விட எனது மனைவிக்கு தான் அதிக விருப்பம் இருந்தது. ஏனென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாக அவருடன் பழகி வருகிறேன். எனவே என் மூலம் நம் இந்திய நாட்டின் பழக்க வழக்கங்கள் கலாச்சாரங்களை தெரிந்து வைத்துள்ளார். அதனால் இருவரது விருப்பபடி எனது சொந்த ஊரில் திருமணம் நடைபெற்றது" என்றார்.

மேலும், தமிழ் முறைப்படி என்றால் என்ன? அதன்படிதான் உங்கள் திருமணம் நடைபெற்றதா? என்று கேட்ட போது, "தமிழ் முறைப்படி என்றால் மணமகன் வேஷ்டி சட்டையுடன், மணமகள் கூரை சேலையுடன் மண மேடையில் புரோகிதர் இல்லாமல் குடும்பத்தின் மூத்தோரின் ஆசிர்வாதத்துடன் நடத்தப்படுவதாகும். அப்படி தான் மண்டபத்தில் இரண்டு தரப்பு பெற்றோர் ஆசிர்வாதத்துடன் மாலை மாற்றிக் கொண்டோம். இதன் பின்னர் பெரிய நாயகி அம்மன் கோயில் சன்னதியில் சுவாமியின் முனபு மனைவி கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தேன். இதன் பின்னர் பெற்றோர், உறவினர்கள் மூத்தவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றோம். இந்த நடைமுறைகள் எல்லாம் என் மனைவிக்கும், அவரது தாயாருக்கும் மிகவும் வித்தியாசமான அனுபவமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது" என்று மகேஷ் கூறினார்

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்