நீலகிரி: உதகை நகரப் பகுதியில் நீண்ட நாட்களாக சுற்றித் திரிந்த காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
நீலகிரி மாவட்டம் உதகை நகர் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை கேத்தி, எமரால்டு போன்ற மலையக குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்தது. இதனை கண்ட பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். எனினும், யாரையும் அந்த யானை தாக்கவில்லை. உதகை நகருக்கு உள்ளேயே ஒரே இடத்தில் நில்லாமல், அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்ந்து கொண்டிருந்தது. உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சுற்றித் திரிந்தது.
சில நேரங்களில் நகர்ப்புறப் பகுதிகளுக்குள் புகுந்து வீதிகளில் சுற்றித் திரிந்தது. சாலைகளிலும் திரிந்ததால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து, நடு ரோட்டில் வாகனங்களை நிறுத்தி விட்டு, யானை செல்லும் வரை பொறுமையாக காத்திருந்து பின்னர் வாகனங்களை எடுத்துச் சென்றனர். விவசாய நிலங்கள், தோட்டங்கள் மற்றும் வீடுகளுக்கு அருகிலும் இந்த காட்டு யானை நடமாடியது.
காட்டு யானை உதகை நகருக்குள் நுழைந்ததில் இருந்து வனத்துறையினர் தொடர்ந்து அந்த யானையை கண்காணித்தபடி இருந்தனர். பாதுகாப்பாக காட்டுக்குள் அதனை அனுப்ப வேண்டும் என்பதில் மிகவும் கவனத்தோடு செயல்பட்டனர். ட்ரோன் கேமராக்கள், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையிலும், ரேஞ்சர்கள், வனக்காவலர்களின் நேரடி கண்காணிப்பிலும் யானையின் செயல்பாடுகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டன.
இதையும் படிங்க: ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி! அரசின் வாதத்தை திருப்தியுடன் ஏற்றுக் கொண்ட மகளிர் நீதிமன்றம்!
இந்த நிலையில் அந்த ஒற்றை காட்டு யானை தற்போது, நீலகிரியின் எல்லையான கெத்தை காட்டுப் பகுதியில் நுழைந்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இது உதகை வாழ் பொதுமக்களிடம் மகிழ்ச்சி, நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினரின் நீண்ட நாள் காத்திருப்புக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது. யானை எந்த அளவிலும் சிரமம் அடையாமல், வெறுப்படைந்து மதம்பிடிக்கும் நிலைக்கு செல்லாமல் அதன் வசிப்பிடத்திற்கு திரும்பியது என்பது மிகப் பெரிய வெற்றியாகும்.
இயற்கை வனவிலங்குகளின் நகர்வுகள் என்பது இயற்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், மக்கள் வாழும் இடங்களுக்குள் அவை நுழையும் போது ஏற்படும் விளைவுகள் பெரிதாக இருக்கலாம். பொதுமக்கள், சுற்றுச்சூழலியலாளர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் இந்த நிகழ்வை பாராட்டியுள்ளனர். “விலங்குகளுக்கு அவர்கள் இயற்கையான சூழலை மீண்டும் வழங்குவது என்பது மனிதரின் பொறுப்பாக இருக்கிறது. வனத்துறை இந்த முயற்சியில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது,” என ஒரு சுற்றுச்சூழல் வன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.