தென்காசி: தொடர் மழை காரணமாக குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
கோடைக்காலம் நிலவி வருவதன் காரணமாக, தென்காசி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக, அதன் எல்லை அருகே அமைந்துள்ள தென்காசி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை அடித்து நொறுக்கி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் இந்த கனமழையின் காரணமாக, குற்றாலத்தின் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட இடங்களில் தற்போது தண்ணீர் அதிகம் வர தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஐந்தறிவு பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும், குற்றால சீசன் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் களைக்கட்டும். ஆனால், இந்த ஆண்டு மே மாதத்திலேயே குற்றால சீசன் தொடங்கியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றால சீசன் காலங்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை கவனத்தில் கொண்டு, வியாபாரிகள் பல்வேறு வகையான கடைகள் போடுவது வழக்கம். அதேபோல, இந்த வருடமும் சுற்றுலாப் பயணிகளில் வருகையை பொறுத்து அதிக எண்ணிக்கையிலான கடைகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையினால் தென்காசி மாவட்டம் முழுவதும் குளிர்ந்த நிலையில், சாரல் மழையுடன் இதமாக காட்சியளிக்கிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தற்போது குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்க துவங்கி உள்ளனர்.
ஜூன், ஜூலை என்றாலே குற்றால சீசன் களைக்கட்டும். இந்த வருடம் அது முன்னதாகவே துவங்கியுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக, அம்மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.