திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களிடம் செல்ஃபோன் மூலம் பேசி பணம் வசூலித்த அங்கன்வாடி பெண் அமைப்பாளர் உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இதற்காக உதவியாளர் (சமையலர்) மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர் (ஆசிரியை) பணிக்காக மாவட்ட முழுவதிலிருந்து பலர் விண்ணப்பித்துள்ளனர்.

இதனை அறிந்த திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அங்கன்வாடி அமைப்பாளர் ராமவதி மற்றும் ஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்த ஜம்ஷிகா ஆகியோர் ஆலங்காயம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பித்துள்ள பெண்களின் முகவரிகளை அதிகாரிகள் உதவியுடன் பெற்றுள்ளனர். பின்னர் அவர்களை செல்ஃபோன் மூலம் பேசி வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆலங்காயம் பகுதியை சேர்ந்த அப்துல் வாகித் என்பவரிடம் ராமவதி மற்றும் ஜம்ஷிகா செல்ஃபோனில் பேசி 50 ஆயிரம் ரூபாய் முன் பணம் கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இருவரையும் உறவினர்களுடன் சேர்ந்து அப்துல் பாசித் பிடித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
- ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கு.. நடுநடுங்க வைக்கும் பின்னணி.. தேங்காய் உரிப்பவர்கள் போட்ட குரூர ஸ்கெட்ச்!
- "கஞ்சா வியாபாரியை காட்டிக் கொடுன்னு...போலீஸ் மிரட்டுது" - கமிஷனர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்!
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு இருவர் மீது வழக்குப்பதிவு செய்து வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அரசு பணிக்காக விண்ணப்பித்தவர்களிடம் ராமவதி, ஜம்ஷிகா ஆகிய இருவர் பேசும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசு பணிக்காக விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது? அரசு அதிகாரிகள் இவர்களுக்கு உதவுகின்றனரா? இந்த மோசடிக்கு பின்னால் மேலும் யாராவது இருக்கிறார்களா? என்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.