மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் மலம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிற்றூர் உடன்பட்டி. இவ்வூரில் ஓட்டக்கோயில் என்று மக்களால் புறக்கணிக்கப்பட்டு கிடந்த பழைய சிவன் கோயில் ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், பிரபு ஆகியோர் அளித்த தகவலின் அடிப்படையில் சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் அறிவுச் செல்வம் ஆகியோர் இந்த கோயிலை ஆய்வு செய்தனர்.
இந்த கோயில் கல்வெட்டுகளை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த உதயகுமார், முத்துப்பாண்டி, முருகன் ஆகியோர் படி எடுத்தனர். மேலும், இந்த கல்வெட்டை தமிழ் அறிஞர் சாந்தலிங்கம் கல்வெட்டு முழுவதுமாக வாசித்து தகவல் வழங்கியுள்ளார்.

அழிந்துபோய் உள்ள சிவன் கோயிலின் மூலவர் பெயர்:
இது குறித்து ஆய்வாளர் தேவி அறிவு செல்வம் கூறுகையில், ''இக்கோயில் அதிஷ்டான பகுதி முழுவதும் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இங்கு இருக்கும் கல்வெட்டுகள் மூலம் இந்த ஊரின் பழமையான பெயர் ஆற்றூர் என்றும் அழிந்துபோய் இருக்கும் சிவன் கோயிலின் மூலவர் பெயர் தென்னவனீசுவரம் என தெரியவந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்தவை. கி.பி. 1217 - 1218 ஆம் ஆண்டுகளில் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
நன்செய், புன்செய் நிலங்கள் 64 காசுகளுக்கு விற்பனை:
அழகப்பெருமாள் எனும் களவழி நாட்டு தலைவன் தனக்கு உரிமையான 'நாகன்குடி' என்ற ஊரின் குளத்தையும், அதை சுற்றியுள்ள நன்செய், புன்செய், தோட்டம், துரவு அனைத்தையும் ஆற்றூர் நம்பி பேரம்பலக் கூத்தன் என்னும் காங்கேயன் எனப்படும் தலைவனுக்கு 64 காசுகளுக்கு விற்றுள்ளான் என்ற செய்தியை இக்கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடிகிறது.
கோயில் அன்றாட செலவுகளுக்கு நிலங்களின் வருவாய்:
மேலும் ஆற்றூர் என்பது சோழ பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இந்த நிலங்களின் நான்கு எல்லைகள் கல்வெட்டில் தெளிவாக வரையறுத்துச் சொல்லப்பட்டுள்ளன. இந்த நிலங்களால் வரும் வருவாய் இவ்வூரில் உள்ள தென்னவனீசுவரம் எனும் சிவன் கோயிலின் அன்றாட செலவுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கிராமத்தின் முந்தைய பெயர் கண்டுபிடிப்பு:
மற்றுமொரு துண்டுக் கல்வெட்டு, திருநோக்கு அழகியான் என்பவன் தனது பெயரில் திருநோக்கு அழகிய விநாயகப் பிள்ளையாரையும், மற்ற பரிவார தெய்வங்களையும் இக்கோயிலில் எடுப்பித்தான் என்ற செய்தியை தருகிறது. இப்புதிய கல்வெட்டு கண்டுபிடிப்புகள் மூலம் இன்றைய உடன்பட்டி கிராமத்தின் முன்னைப் பெயர் ஆற்றூர் என்பதும், இவ்வூரில் தென்னவனீசுவரம் என்னும் பெயரில் 800 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிவன் கோயில் செயல்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.

தலை வரை மண்மூடிய தட்சணா மூர்த்தி சிலை
கோயில் அமைப்பு, கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம் நுழைவு வாயில் என மிகப்பெரிய வளாகத்தில் அமைந்திருக்கிறது. கோயிலின் உள்ளே பரிவார தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அம்மன் சிலைகள் இருந்துள்ளன. இக்கல்வெட்டில் வரும் விநாயகர் திருமேனியை கண்டறிய வேண்டும். தட்சணா மூர்த்தி சிலையின் தலைப்பகுதி வரை மண்மூடி இருந்தது.
வெள்ளத்தில் சென்ற அம்மன் சிலைக்கு வழிபாடு
அம்மன் சிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லையாற்றின் வெள்ளப்பெருக்கில் ஆற்றின் உள்ளே அடித்து செல்லப்பட்டுள்ளது. தற்போது தட்சிணாமூர்த்தியின் சிலை தோண்டி வெளிக் கொணரப்பட வேண்டும். அம்மன் சிலையானது முல்லையாற்றின் மற்றொரு கரையில் எடுத்து வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: "மதுரை நாகமலையில் இத்தனை வகை பாம்புகளா?" ஊர்வன சரணாலயம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!
கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், நுழைவாயில் இருந்த இடம் தெரியாமல் முழுமையாக சிதைந்துள்ளது. மூலவரான லிங்கத்திருமேனி தற்போது கருவறை உள்ளே எடுத்து வைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.
கலசம் இல்லாமல் கட்டப்பட்ட பாண்டியர் கோயில்
பாண்டியர்களுக்கே உரித்தான கோயில் கட்டடக் கலை அமைப்பு கொண்ட பாதம் பந்த அதிர்ஷ்டானம், தரங்க போதிகை, பிரம்மாண்டமான மூலவர் திருமேனி, தட்சிணாமூர்த்தி, அம்மன் சிலைகளை இங்கு காணலாம். கோயில் அமைப்பை பார்க்கும்போது சிகரம், கலசம் இல்லாமல் கட்டப்பட்ட பாண்டியர்களின் கோயிலாக தோன்றுகிறது." என்று ஆய்வாளர் தேவி அறிவு செல்வம் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்