BY ஆர். மணிகண்டன்
திருநெல்வேலி: முகம், கை, கால்களில் சுறுக்கம்... தலையில் இழுத்துக் கட்டிய துணி... சற்று உள்ளே தள்ளியிருக்கும் கண்கள்... குனிந்த நிலையில் நடை... கையில் எப்போதும் புல் அறுக்கும் சிறிய அரிவாள்... என தோற்றம் அளிக்கிறார் 80 வயதான பார்வதி பாட்டி. இன்னும் உழைத்துக் கொண்டே அந்த உழைப்புக்கு உதாரணமாக திகழ்கிறார் என்றால் மிகையல்ல.
திருநெல்வேலி மாவட்டம் கல்லூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி பார்வதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மகன் இறந்து விட்டார். உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது வீட்டை விட்டு வெளியேறிய கணவரும் எங்கே சென்றார்? என்ற ஒரு தகவலும் இல்லை. இதனால் பார்வதி பாட்டி பாளையங்கோட்டை அருகே பெரியபாளையத்தில் உள்ள தனது மகள் வள்ளி வீட்டிலேயே தங்கி விட்டார்.

இருந்தாலும், மகள் வீட்டில் சும்மா இருக்க மனமில்லாமல் இருந்த பார்வதி பாட்டி, பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்கள் அருகில் உள்ள வயலில் புற்களை அறுத்து பாளையங்கோட்டை மார்க்கெட்டில் விற்று வருவதை பார்த்துள்ளார். இதையடுத்து தானும் புல் அறுக்க செல்ல வேண்டும் என எண்ணி களத்தில் இறங்கினார். அதன் படி கடந்த 10 ஆண்டுகளாக பார்வதி பாட்டி பெரியபாளையம் அருகே கோட்டூர் சாலையில் உள்ள வயல் வெளியில் புல் அறுத்து மூட்டைகளில் சேகரித்து அவற்றை பாளையங்கோட்டை மார்க்கெட்டில் விற்று வருகிறார்.

இதற்காக பார்வதி பாட்டி நாள்தோறும் காலை 5 மணிக்கு எல்லாம் கண் விழித்து விடுகிறார். எழுந்தவுடன் தேநீர் அருந்தி விட்டு வெற்றிலை போடத் தொடங்குகிறார். காலையில் அன்றைய நாள் முழுவதும் தனக்கு தேவையான பாக்குகளை நொறுக்கி டப்பாவில் சேகரித்துக் கொள்கிறார். சுண்ணாம்பு, வெற்றிலை போன்றவற்றை சுறுக்குப் பையில் எடுத்து வைத்துக் கொள்கிறார்.
காலையில் பழைய சோறு சாப்பிட்டு விட்டு மதியத்துக்கு தேவையான சாப்பாட்டையும் எடுத்துக் கொள்கிறார். பின்னர் சாக்கு பைகளை எடுத்துக் கொண்டு காலை 7 மணிக்கு எல்லாம் வீட்டில் இருந்து புறப்படும் பார்வதி பாட்டி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தள்ளாடியபடியே கையில் கம்பு ஊன்றி நடந்தே சென்று வயல் பகுதியை அடைகிறார்.
தொழில் மீதான பக்தி
அவருக்கு உடல் தளர்ந்தாலும் மனதில் உறுதி தளரவில்லை. வயலில் இறங்கி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் புல் அறுக்கத் தொடங்குகிறார் பார்வதி பாட்டி. சுமார் மூன்று மணி நேரம் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புற்களை அறுத்து, சாக்குப் பைகளில் சேகரித்து வைக்கிறார். பின்னர் மதியம் தான் கொண்டு வந்த சாப்பாட்டை அருகே மரத்தின் நிழலில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு புற்களுடன் ஆட்டோவில் பாளையங்கோட்டை மார்க்கெட் நோக்கி செல்கிறார்.
10 மூட்டை புல்
மார்க்கெட் அருகே சாலை ஓரம் வெயிலில் அமர்ந்தபடி பார்வதி பாட்டி தனது புல் வியாபாரத்தை தொடங்குகிறார். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கு தேவையான புற்களை மார்க்கெட்டில் வந்து வாங்கி செல்கின்றனர். அதிலும் பார்வதி பாட்டி சற்று அதிகமாகவே புற்களைக் கொடுப்பதால் பலர் அவரைத் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தங்கள் தேவைக்கு ஏற்ப பொதுமக்கள் பார்வதி பாட்டியிடம் பணத்தை கொடுத்து புற்ககளை வாங்குகின்றனர்.
மதியம் 3 மணிக்கு எல்லாம் மார்க்கெட் வந்து சேரும் பார்வதி பாட்டி இரவு 7 மணி வரை அங்கேயே அமர்ந்து வியாபாரத்தை கவனிக்கிறார். கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 10 மூட்டைகளை கொண்டு வந்து அனைத்தையும் விற்ற பிறகு அங்கிருந்து பெரியபாளைத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு நகர தொடங்குகிறார்.

பார்வதி பாட்டி வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வரும் போது இரவு 8 மணியை கடந்து விடும் என்கிறார் அவரது மகள் வள்ளி. இவர் கட்டுமான தொழிலாளியாக உள்ளார். இவரது கணவர் கனகராஜ் ஓவிய கலைஞராக இருக்கிறார். வள்ளிக்கு இரண்டு மகன்கள். கனகராஜூக்கும் பெரிய அளவில் வருமானம் கிடையாது. இருப்பினும் கடைசி காலத்தில் பார்வதி பாட்டியை எந்த வேலையும் பார்க்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது வள்ளி குடும்பத்தின் விருப்பம்.
'கடைசி வரை உழைப்பேன்'
ஆனால், உயிர் இருக்கும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன் என்ற வைராக்கியத்தோடு பார்வதி பாட்டி வாழ்ந்து வருகிறார். இது தொடர்பாக நாம் அவரிடம் பேச முயன்ற போது, அவரால் பேச முடியவில்லை.
பார்வதி பாட்டியின் மகள் வள்ளி நம்மிடம் கூறுகையில், "எங்க அம்மா சிறு வயதில் இருந்தே உழைத்து வாழ்ந்தவர். நான் குழந்தையாக இருந்த போதே அம்மா நாள்தோறும் வாழை தோப்பிற்கு வாழைக்காய் அறுக்க செல்வார். அப்போதே கடினமாக உழைத்து தான் எங்களை காப்பாற்றினார். நான் என்ன கூறினாலும் காலையில் எழுந்தவுடன் சாக்கு பையுடன் வேலைக்கு சென்று விடுவார். கேட்டால் என்னால் முடிந்தவரை உனக்கு உதவியாக உழைத்து தருகிறேன் என்று கூறுவார்" என்று வள்ளி நம்மிடம் தெரிவித்தார்.
வள்ளியின் கணவர் கனகராஜ் நம்மிடம் கூறுகையில், ''எனது மாமியாரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று பலமுறை கூறியும் கேட்கவில்லை. ஒரு தீபாவளி, பொங்கல், பண்டிகை என நல்ல நாட்கள் கூட அவர் வீட்டில் இருக்க மாட்டார். அந்த நாட்களிலும் சாக்கு பையை தூக்கிக் கொண்டு புல் அறுக்க சென்று விடுவார். இந்த வயதிலும் அவர் சுறுசுறுப்பாக இயங்கி வருவதற்கு காரணம் அந்த கால உணவு முறை மட்டுமல்ல, எங்களது குடும்பத்தின் மீது அவர் வைத்துள்ள பாசமும் காரணம் என நினைக்கிறேன்'' என்றார்.
தள்ளாத வயதிலும், மகள் மற்றும் அவரது குடும்பத்திற்காக உழைக்கும் பார்வதி பாட்டிக்கு ஒரு சல்யூட்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.