வேலூர்: காட்பாடி அருகே விடுதியில் தங்கி படித்து வரும் கல்லூரி மாணவனை தாக்கி பணம் மற்றும் பொருட்களை பறித்து சென்ற பாஜக பிரமுகர் மகன் உட்பட 5 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 6ம் தேதி இரவு விடுதி அறையில் தங்கியிருந்த மாணவரை 5 பேர் கொண்ட கும்பல், அத்துமீறி நுழைந்து மிரட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் வைத்திருந்த ரூ.74 ஆயிரம், வாட்ச், இயர்பட்ஸ் உள்ளிட்ட பொருட்களை 5 பேர் கொண்ட கும்பல் எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து மாணவன், காட்பாடி போலீசில் நேற்று புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மாணவனை மிரட்டி பணம் பறித்ததாக காட்பாடியை சேர்ந்த ரோகித் (20), பிரவீன் (22), விக்னேஷ் (22), அரி (27), சைதாப்பேட்டை அபினாஷ் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க: |
இதில் ரோகித் என்பவர் பாஜக பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் கே.ஜி.குட்டியின் மகன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், மாணவனிடம் இருந்து திருடி சென்ற பொருட்களை மீட்டு உள்ளனர். அத்துடன் பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
காட்பாடியில் கல்லூரி மாணவனை மிரட்டி பணம், பொருட்களை பறித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.