திருவள்ளூர்: தண்ணீர் லாரியை முந்தி செல்ல முயன்ற இரு சக்கர வாகன ஓட்டி தடுமாறி கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள விபத்தின் காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்தவர் சக்திவேல் (42). இவர் திருவேற்காடு - அம்பத்தூர் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்னால் சென்ற சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய ஒப்பந்த லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார். இதில் சக்திவேல் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து உடனடியாக ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி ஓட்டுநர் சுவாமிநாதன் (48) என்பவரை ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "தென்னிந்திய மாநிலங்களுக்கு பிரச்சனையாக உருவெடுத்துள்ள மக்கள்தொகை கட்டுப்பாடு" - சந்திரபாபு நாயுடு வேதனை!
மேலும், விபத்து நடந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இருசக்கர வாகன ஓட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு வரும் சக்திவேல் தண்ணீர் லாரியை முந்தி செல்ல லாரிக்கு வலது பக்கமாக வருகிறார். தொடர்ந்து லாரியை ஒட்டியபடி முந்தி வந்த சக்திவேல் நிலைதடுமாறி இடது பக்கமாக விழுகிறார். அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் சக்திவேல் மீது ஏறி இறங்கி சென்றது. இதனால் சம்பவ இடத்திலேயே சக்திவேல் உயிரிழந்தார். இதை கண்ட வாகன ஓட்டிகள் பதறியபடி சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு விபத்து நடந்த இடத்தை சுற்றி வேடிக்கை பார்க்கின்றனர். இந்த சம்பவத்தால் திருவேற்காடு - அம்பத்தூர் நெடுஞ்சாலை பரபரப்பாக காணப்பட்டது.